இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் வரலாற்றுப் படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிரஞ்சீவியின் காலில் விழுந்தார் விஜய் சேதுபதி.
ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு தயாராகியுள்ள படமே சைரா நரசிம்ம ரெட்டி. இந்தப் படத்தில் சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். பாகுபலிக்குப் பின் தெலுங்கிலிருந்து அதிக பட்ஜெட்டில், அதாவது சுமார் 240 கோடியில் உருவாகிவரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி.
சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, கிச்சா சுதீப் உட்பட பல இந்திய பிரபலங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் 151ஆவது படமான இந்தப் படத்தை நேற்று (செப்டம்பர் 23) சென்சார் அதிகாரிகள் பார்வையிட்டு படத்துக்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், ஒரு காட்சிக்குக்கூட ‘கட்’ கொடுக்காமல் சான்றிதழ் அளித்துள்ளது ஆச்சரியம் அளிக்கும் செய்தியாகும்.
இந்த நிலையில், நேற்று இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் சிரஞ்சீவி, ராஜமௌலி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விஜய் சேதுபதி அரங்கத்திற்குள் வந்ததும் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் ஏற்பட்டது. அவர் மேடை ஏறியதும் நடிகர் சிரஞ்சீவி, “விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நரசிம்ம ரெட்டிக்கு தோள் கொடுக்கும் நம்பிக்கையான தமிழ் வீரனாக நடித்திருக்கிறார். அவரது பிஸியான நேரத்தில் இந்தப் படத்துக்காக நேரம் ஒதுக்கி இருக்கிறார். இந்தப் படத்துக்காக அவர் கடினமாக உழைத்தார். என் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி. எப்போதும் என்னை ‘அண்ணா அண்ணா’ என்று மட்டுமே கூப்பிடுவார் , இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது பெரும் மகிழ்ச்சி. அவர் இரவு பகலாக உழைக்கக் கூடியவர்” எனக் கூறினார் சிரஞ்சீவி.
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே சிரஞ்சீவி, விஜய் சேதுபதியின் கைகளைப் பற்றி ‘நன்றி, நன்றி’ என கூறினார். உடனே விஜய் சேதுபதி அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி, விஜய் சேதுபதியைத் தூக்கி வாழ்த்தினார்.
இந்தப் படத்துக்கு அமித் த்ரிவேதி இசையமைத்திருக்கிறார்; ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்; ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘கொனிடேலா’ என்ற நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார்.
அக்டோபர் 2ஆம் தேதி சைரா நரசிம்ம ரெட்டி, திரைக்கு வரவிருக்கிறது.�,