மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தூர்தர்ஷன் ஊழியர் தனது தாய்க்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி, பார்ப்பவர்கள் மனதை உருக வைத்துள்ளது.
மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் செய்திகளைச் சேகரிப்பதற்காக , டெல்லியைச் சேர்ந்த தூர்தர்ஷன் குழுவினர் தண்டேவாடா மாவட்டத்தில் முகாமிட்டிருந்தனர். ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த், நிருபர் திரஜ் குமார் மற்றும் உதவி ஒளிப்பதிவாளர் மோர்முக்த் ஷர்மா உள்ளிட்டோர் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளனர்.
அவர்கள் அரண்பூர் என்ற பகுதிக்குப் பாதுகாப்புக்குச் சென்ற போலீசாருடன் சென்றுள்ளனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 2 போலீஸ்காரர்கள் மற்றும் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நிலையில், பின்னணியில் துப்பாக்கி குண்டுகளின் சத்தம் காதுகளைத் துளைத்துக் கொண்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், தானும் இந்தத் தாக்குதலில் இறந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உதவி ஒளிப்பதிவாளர் மோர்முக்த் ஷர்மா தனது தாய்க்கு அனுப்புவதற்காக [வீடியோ]( https://twitter.com/AdityaRajKaul/status/1057482370591457280) ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அதில், தேர்தல் செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்தபோது தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் எங்களை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தினர் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, ”அம்மா உங்களை மிகவும் நேசிக்கிறேன்… இது ஓர் ஆறுதலுக்காக… இந்தத் தாக்குதலில் ஒருவேளை நான் கொல்லப்படலாம். இங்கு சூழ்நிலைகள் சரியாக இல்லை. எனக்கு முன்னால் மரணத்தைப் பார்க்க முடிந்தாலும்கூட எனக்குப் பயம் ஏதும் இல்லை. இங்கு உயிர் பிழைப்பது கடினம். என்னுடன் 6, 7 ஜவான்கள் உள்ளனர். மாவோயிஸ்ட்டுகள் எங்களைச் சூழ்ந்துகொண்டுள்ளனர். இதை நான் தெரிவிக்கிறேன்” என்று வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அதுபோன்று, மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் தொடர்பாக மற்றொரு [வீடியோ]( https://twitter.com/AdityaRajKaul/status/1057497099108016128) ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், ஒருவர் (ஒருவேளை ஜவான்களில் ஒருவராகவும் இருக்கலாம்) ஆம்புலன்ஸைக் கூப்பிடுங்கள் என்று கூறுகிறார். மற்றொருவர் மோர்முக்த் ஷர்மாவைப் பார்த்து தரையில் படுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். அப்போது, மோர்முக்த் தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு இல்லை தோழர், நீங்கள் தரையிலேயே படுத்திருங்கள். ஜவான்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கவலைப்படாதீர்கள் என்று கூறுவது போல் உள்ளது.
இந்த இரு வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.�,