திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் என்று நேற்று (மார்ச் 29) நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சோதனை தொடர்வதால் அரசியல் வட்டாரம் பரபரப்பாகியிருக்கிறது.
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் காட்பாடி காந்தி நகரில் இருக்கும் துரைமுருகனின் வீட்டுக்கு மூன்று பேர் சென்றுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, வீட்டை சோதனையிட வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது பிரச்சாரத்துக்கு சென்ற துரைமுருகன் வீடு திரும்பியிருக்கவில்லை.
தகவல் அறிந்து துரைமுருகன் வீட்டுக்குச் சென்ற திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன் அவர்களோடு விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் தகவல் அறிந்து துரைமுருகனும் வீட்டுக்கு வந்துவிட்டார்.
‘நான் ஹார்ட் பேஷன்ட். இப்பல்லாம் என்னால சோதனைக்கு ஒத்துழைக்க முடியாது. காலையில வாங்க’ என்று சொல்லியிருக்கிறார் துரைமுருகன். கூடவே பரந்தாமனும், “சோதனை செய்யும் நேரமா இது? காலையில் வாருங்கள். அதுவரை வேண்டுமானால் வீட்டு வாசலிலேயே இருங்கள்” என்று கூறியிருக்கிறார். ஆனால் அதிகாரிகள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. வீட்டு வாசலில் வாதப் பிரதிவாதங்கள் தொடர, தொண்டர்களும் வாசலில் குவிந்தனர். இதைப் பார்த்த அதிகாரிகள், ‘இங்கே ஏன் கூட்டம் சேர்க்கிறீர்கள்? நாங்கள் போலீசைக் கூப்பிட வேண்டியிருக்கும்’ என்று எச்சரித்தனர்.
இதையடுத்து பேச்சுவார்த்தையின் படி துரைமுருகன் சார்பில் ஒரு கடிதம் எழுதி வருமான வரித்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் தொண்டர்கள் குவிந்தபடியே இருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை என மீண்டும் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் வலுக்கட்டாயமாக சோதனையைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
மேலும் துரைமுருகன் தீவிர ஆதரவாளரும் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளருமான தேவராஜ் வீடு வாணியாம்பாடி-ஆலங்காயம் சாலையில் உள்ள செக்குமேட்டில் இருக்கிறது. அங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேற்று இரவே தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் வேலூர் திமுகவினர். மேலும், ‘கர்நாடகாவில் எப்படி பாஜகவின் எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததோ அதே போல தமிழகத்தில் திமுகவினரைக் குறிவைத்து ரெய்டு நடத்துவதாக திமுகவினர் புகார் கூறுகிறார்கள்.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டது என்ன என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை.�,