விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தோடே வெளியாக இருந்த திரைப்படம் சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் சென்னையில் ஒரு நாள் 2. இதன் வெளியீட்டு தேதி குறித்து யாரும் யூகிக்காத வகையில் மெர்சல் படத்தோடு தீபாவளியன்று வெளியாக இருப்பதாக சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உறுதிபடுத்தியுள்ளார்.
சென்னையில் ஒருநாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தைப் பண்ணாமல் கதையாசிரியர் ராஜேஷ் குமார் எழுதிய க்ரைம் த்ரில்லர் நாவலை தழுவிப் படத்தை உருவாக்கியுள்ளார் ஜேபிஆர். சரத்குமாருடன் ராமதாஸ், சுஹாசினி, அஞ்சனா பிரேம், ராஜசிம்ஹன், சாதன்யா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். ஜேக்ஸ் பீஜாய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ராம் மோகன் தயாரித்துள்ளார்.
மெர்சல் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும் போது சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவராது என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சசிகுமாரின் கொடிவீரன் பந்தயத்தில் இணைந்திருந்தது. ஆனால் இன்னும் அப்படம் குறித்தான உறுதியான அறிவிப்புகள் வெளிவரவில்லை. தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள மேயாத மான் திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக வெளிவரவிருக்கிறது. அந்த வரிசையில் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள சென்னையில் ஒரு நாள் 2 படமும் இணைந்துள்ளது.
திரையரங்கப் பிரச்சனை, இரட்டை வரிப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருக்கும் வேளையில், இன்னும் இந்த தீபாவளி ரேஸில் சில படங்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.�,