திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
திமுக சார்பாகப் போட்டியிட 40 நாடாளுமன்றத் தொகுதியிலிருந்தும் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று காலை முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 1,050 பேர் திமுக சார்பில் போட்டிட விருப்ப மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஒருவரது பெயரிலேயே 50க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுத் தாக்கல் செய்திருப்பதும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் 300 முதல் 400 பேர் வரை இந்த நேர்காணலில் பங்கெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலினுடன் திமுக பொருளாளர் துரைமுருகன், கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இந்த நேர்காணல் நடந்து வருகிறது. 21 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் நேற்று ஒருநாளில் முடிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத் தொகுதிக்கான நேர்காணல் இன்று நடந்து வருகிறது. முதலில் கன்னியாகுமரி தொகுதிக்கான நேர்காணல் நடந்தது. அடுத்ததாக தூத்துக்குடி தொகுதிக்கான நேர்காணல் நடந்தது. தூத்துக்குடி தொகுதிக்கான நேர்காணலில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் கலந்துகொண்டார்.
முன்னதாக இன்று காலையில் நடந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். மதிமுக போட்டியிடும் ஒரு மக்களவைத் தொகுதி எது என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மதிமுக எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று வைகோ தெரிவித்தார்.�,