�
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் முடிவு இன்று காலை வெளியானது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பெருவாரியானவர்கள் வாக்களித்தனர். இது சர்வதேச சந்தையில் உடனடியாக எதிரொலித்தது. இதன் காரணமாக சந்தையில் பவுண்டின் விலை பதினொரு சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. பவுண்டின் விலையில் ஏற்பட்ட இந்த சரிவானது, 31 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ள ஒன்றாகும். இது பிரிட்டனின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் ஆட்சிக்காலத்தில் இருந்த நிலை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 677 புள்ளிகள் சரிந்தன. நாஸ்டாக் 227 புள்ளிகளும், எஸ் & பி 500, 106 புள்ளிகளும் சரிந்தன. ஜப்பானின் நிக்கி 1,100 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இது இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. இன்று காலை மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 1,010.22 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. தேசியப் பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 306 புள்ளிகள் சரிந்து 7,960.40 என்ற அளவில் வர்த்தகமானது.
பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பினர். இதன் விளைவாக தங்கத்தின் விலை ஆறு சதவிகிதம் அதிகரித்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,104 உயர்ந்து ரூ.23,720 என்ற விலையில் விற்கப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரூ.138 அதிகரித்து ரூ.2,965 என்ற அளவில் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,827 என்பதாக இருந்தது.�,