தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கானது, இன்று (ஆகஸ்ட் 23) மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன் முடிவில், இந்த வழக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று தினகரன் ஆதரவாளர்களான 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து, அதிமுக கட்சிக் கொறடா அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்தார். ஒரு உறுப்பினர் மீண்டும் அதிமுகவில் இணைந்ததால், அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த இந்திரா பானர்ஜி ஒரு தீர்ப்பையும், நீதிபதி சுந்தர் இதற்கு மாறான தீர்ப்பையும் வழங்கினர். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் முன்னிலையில், இதுவரை 10 நாட்கள் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்று, இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்தபோது, தமிழக அரசுத் தரப்பு மற்றும் எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர்கள் காரசாரமாக வாதம் செய்தனர்.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அப்போது, “ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டியதாக 18 எம்எல்ஏக்களுக்கு எதிராக ஜக்கையன் அளித்ததாகச் சொல்லப்படும் புகார் தொடர்பான ஆவணங்களை, தமிழகச் சட்டமன்ற சபாநாயகர் தங்கள் தரப்புக்கு அளிக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
ஆட்சிக்கு எதிராக 18 சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படவில்லை என்று அவர் தெரிவித்தார். “கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று, ஆளுநருக்கு அளித்த 4 பக்க கடிதத்தின் எந்த இடத்திலும் அரசுக்கு எதிராகவோ அல்லது ஆட்சிக்கு எதிராகவோ எந்தக் கருத்துக்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. முதல்வரை மட்டும் மாற்ற வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது” என்று வழக்கறிஞர் ராமன் எடுத்துரைத்தார். உட்கட்சி விவகாரம் என்பதால், 18 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர தகுதி நீக்கம் செய்து உத்தரவிட முடியாது எனவும் அவர் வாதிட்டார்.
“திமுகவுடன் கூட்டு சேர்ந்து, ஆட்சிக்கு எதிராக இவர்கள் 18 பேரும் செயல்பட்டார்கள் என்ற சபாநாயகரின் முடிவு தவறானது. சபாநாயகர் விடுத்த நோட்டீசுக்கான பதிலை முழுமையாக ஆய்வு செய்யாமல் அவசரமாகத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு முற்றிலும் தவறானது” என்றும் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், தமிழக சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் தரப்பில் ஆஜரானார் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம். தன் பதில் வாதத்தில், உட்கட்சிப் பிரச்சினைகளை மூன்றாவது நபரிடம் எடுத்துச் செல்ல முடியாது என்று தெரிவித்தார். “ஒருவேளை ஆளுநர் இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் என்ன முடிவுகள் வந்திருக்கும். ஆளுங்கட்சிக்கு எதிராக முடிவுகள் அமைந்திருக்கும். இதிலிருந்து 18 பேரும் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது” என்று கூறினார்.
முதல்வரை ஆளுநரால் மாற்ற முடியாது என்றும், கட்சி நடவடிக்கை எடுக்காததால் ஆளுநரிடம் புகார் அளித்ததாக எம்எல்ஏக்களே ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் தனது வாதத்தில் குறிப்பிட்டார். “18 பேர் புகார் அளித்த அடுத்த நாள், திமுக செயல்தலைவர் ஆளுநரைச் சந்தித்து சட்டப்பேரவையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி மனு அளித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியன்று நடந்த அதிமுக கட்சிக் கூட்டத்திற்கு 18 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை” என்று வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார்.
இதனையடுத்து, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விசாரணையின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் இறுதி வாதம் நடைபெறும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி சத்தியநாரயணன்.�,