டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை காலை முதல் வெளியாகவுள்ளன.
நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 8ஆம் தேதி நடந்துமுடிந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. எனினும் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அமித் ஷா, ‘ பிப்ரவரி 11-ம்தேதி வெளியாகும் தேர்தல் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியைத் தரும்’ என்று கூறியுள்ளார். இதனிடையே தேர்தல் வாக்குப் பதிவு சதவிகிதம் வெளியிடப்படாதது குறித்து அதிர்ச்சியடைந்த அரவிந்த் கேஜ்ரிவால், தேர்தல் ஆணையத்திற்கு கேள்வியும் எழுப்பினார். பின்னர்தான் வாக்குப் பதிவு சதவிகிதம் வெளியிடப்பட்டது.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை காலை முதல் வெளியாகத் துவங்கவுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தைப் போல டெல்லியிலும் வாக்குக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரம் நடந்துள்ளது என்ற தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய டெல்லிவாழ் தமிழர்கள் சிலர், “வழக்கமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான் பணம் கொடுத்து வாக்கு வாங்கும் கலாச்சாரம் பெரிய அளவில் இருக்கிறது. இதற்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற தேர்தல்களின்போது வேட்பாளர்கள் யாரும் வாக்குக்கு பணம் கொடுத்து பார்த்ததில்லை.
ஆனால், இந்தத் தேர்தலில் யார் வெற்றிபெறுவது என்பதில் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த சூழலில்தான் பாஜகவினர் இங்கு வீடு வீடாக வருகை தந்து வாக்குக்கு ரூ.2,000 வரை பணம் அளித்தனர். இது ஒருபுறம் என்றால் குறிப்பிட்ட சில இடங்களில் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களும் பணம் கொடுத்தார்கள். பாஜகவினர் அளித்தது 2,000 ரூபாய் என்றால் ஆம் ஆத்மி கட்சியினரோ 3,000 ரூபாய் வரை அள்ளி இறைத்தனர்.” என்று தெரிவித்தனர்.
இந்த விஷயத்தை பிறகு கேள்விப்பட்ட பாஜகவினர், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள நாமே 2000 ரூபாய்தான் கொடுத்துள்ளோம், ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்லிக்கொள்ளும் ஆம் ஆத்மிக்கு ஓட்டுக்கு 3,000 கொடுக்கும் அளவுக்கு எங்கிருந்து பணம் வந்துள்ளது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆம் ஆத்மி பணம் அளித்த தகவல் பாஜக மேலிடத்திற்கும் சொல்லப்பட்டிருக்கிறது. இதுபற்றி உளவுத் துறையினர் தீவிரமாக விசாரித்து வருவதாகத் தெரிவிக்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்.
**எழில்**
�,