2019ஆம் ஆண்டு ஐபிஎல்லின் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது அணியில் உள்ள சீனியர் வீரர்கள் சிலர் அதிரடியாகக் கழற்றி விடப்பட்டுள்ளனர்.
12ஆவது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதற்கான வீரர்கள் பரிமாற்றம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் தற்போது இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்குத் தேவையில்லை எனக் கருதப்படும் அதிக விலை கொண்ட சீனியர் வீரர்களைக் கழற்றிவிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சேர்ந்த யுவராஜ் சிங், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை பஞ்சாப் அணி நேற்று (நவம்பர் 15) வெளியிட்டது. இதுகுறித்து பஞ்சாப் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவருக்கும் இவ்வளவு நாள் எங்கள் அணிக்காகச் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களது எதிர்காலப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த மாதத் தொடக்கத்தில் அந்த அணியில் தலைமை ஆலோசகராக இருந்துவந்த விரேந்திர சேவாக் அணியில் இருந்து வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி டேர் டெவில்ஸ் அணி அந்த அணியைச் சேர்ந்த அனுபவ வீரரான கவுதம் காம்பிரை அணியிலிருந்து வெளியேற்றியுள்ளது. அவருடன் ஜேசன் ராய், ஜூனியர் டாலா, லியம் பிளங்கெட், டேனியல் கிறிஸ்டியன், க்லென் மேக்ஸ்வெல் ஆகியோரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விராட் கோலியின் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தற்போது பிரெண்டன் மெக்குல்லம், க்றிஸ் வோக்ஸ், கோரி ஆண்டர்சன் ஆகியோரை வெளியேற்றியுள்ளது.
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டுத் தடையில் இருக்கும் டேவிட் வார்னரைத் தக்கவைத்துள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, விரித்திமான் சஹா, அலெக்ஸ் ஹேல்ஸ், கார்லோஸ் பிராத்வெய்ட் ஆகியோரை வெளியேற்றியுள்ளது.�,”