Gசபரிமலை: இன்று நடை திறப்பு!

Published On:

| By Balaji

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள நிலையில், இன்று (நவம்பர் 16) மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது.

கோயில் நடை திறக்கப்பட்ட பிறகு, புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் பதினொட்டாம் படி ஏறி பதவி ஏற்றுக்கொள்கின்றனர். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. நாளை (நவம்பர் 17) அதிகாலை 4 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளையிலிருந்து 41 நாட்கள் வரை கோயில் நடை திறந்திருக்கும்.

டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை விழா முடிந்த பின்பு, மீண்டும் கோயில் நடை சாத்தப்படும். மூன்று நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 30ஆம் தேதியன்று மகர விளக்கு பூஜைக்காகத் திறக்கப்படும் கோயில் நடை ஜனவரி 14ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் சபரிமலை ஐயப்பனைத் தரிசிப்பதற்குப் பெண்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், போராட்டக்காரர்களைச் சமாளிக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை செல்லும் அனைத்துப் பாதைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரிடம் முன் அனுமதி பெற்ற பின்பே சபரிமலை செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பத்தினம்திட்டா, நிலக்கல், எரிமேலி, பம்பை என அனைத்துப் பகுதிகளிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share