Gகோலிக்கு அடுத்ததாக சிந்து

Published On:

| By Balaji

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலில் பி.வி.சிந்து 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பி.வி. சிந்து என்று அறியப்படும் புரசலா வெங்கட சிந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் தனது முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம் பல மில்லியன் டாலருக்கான விளம்பர ஒப்பந்தங்களையும் கைப்பற்றியிருந்தார். தற்போது இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய போட்டியில் இவர் சாதிக்கத் தவறினாலும் கூட, அந்த ஒப்பந்தங்களில் எந்த வித மாற்றங்களும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசிலில் கிடைத்த வெள்ளிப் பதக்கத்தையடுத்து 90க்கும் மேற்பட்ட விளம்பர ஒப்பந்தங்களைக் பெற்ற சிந்து, அதன் மூலம் 59 கோடியே 52 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் உள்ளார். ரோமேனியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையும், WTA சுற்றுப் பயணத்தில் முதல் இடத்தைப் பிடித்தவருமான சிமோனா ஹலேப்பை விட சிந்து முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்கள் வரிசையில் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்ததாக தற்போது பிவி சிந்து உள்ளார். முன்னதாக 2017-18ஆம் ஆண்டில் கிரிக்கெட் மூலம் கோலி 26 கோடியே 74 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும்; விளம்பரம், பரிசுத்தொகை மற்றும் இதர வருமானங்கள் மூலம் 133 கோடியே 73 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்திருந்தது.

ஆசியப் போட்டியில் பங்கேற்று வரும் சிந்து, ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பிடித்தது குறித்துப் பேசியபோது, ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. காரணம், என்னை உலகின் மற்ற பெரிய நட்சத்திரங்களுடன் ஒப்பிடத் தொடங்கி விட்டனர்” என்று கூறினார். மேலும் பலரும் அவரிடம் நீ இப்போது பெரிய பணக்காரி என்று கூறுவதாகவும் தெரிவித்தார்.

**எப்படி சிந்துவைத் தேடி இவ்வளவு விளம்பர ஒப்பந்தங்கள் வந்தன?**

இதற்கு முன் இந்தியா, ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் பிரிவில் ஒரே ஒரு தங்கம்தான் வென்றிருந்தது. 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்திரா தங்கம் வென்றிருந்தார். மற்ற 8 தங்கப் பதக்கங்களும் ஹாக்கி என்ற குழு விளையாட்டிலிருந்து கிடைத்துள்ளன.

ரியோவில் சிந்துவின் வெள்ளிப்பதக்கமும், மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக்கின் வெண்கலப் பதக்கமும் சேர்த்து மொத்தமாக அந்தத் தொடரில் இந்தியா 2 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. இதுவே சிந்துவைத் தேடி இத்தனை விளம்பர ஒப்பந்தங்கள் வரக் காரணமாகும்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel