�
தமிழ்த் திரையுலகில் இருந்து பல கதாநாயகிகள் பாலிவுட் சென்று முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்துள்ளனர். தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சென்றுள்ள நிலையில் அவரை வரவேற்று ஜான்வி கபூர் பதிவிட்டுள்ளார்.
இந்திய கால்பந்தாட்ட வீரரும் பயிற்சியாளருமான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் சையத் கதாபாத்திரத்தில் நடிக்க அவரது மனைவி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். அமீத் ஷர்மா இயக்கும் இந்தப் படத்தை ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்நிலையில் கீர்த்தி படக்குழுவில் இணைந்தது குறித்து ஜான்வி, “மகாநடி திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து உங்கள் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அப்பாவின் அடுத்த படத்தில் நீங்கள் இணைந்திருப்பது மிகுந்த உற்சாகமளிக்கிறது. நல்வரவு” என தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
1950ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரையிலான இந்திய கால்பந்து அணியை பெருமைப் படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள போதும் மெல்லிய காதல் கதையும் சேர்த்து பின்னப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதே கீர்த்தி சுரேஷும் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான்வி கபூரின் தாயாரும் மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியும் தமிழ்த் திரையுலகில் இருந்து பாலிவுட் சென்று தடம் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.�,