இப்போது நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மிகவும் சுவையான சைடிஷ் டிக்கா. மட்டன் டிக்கா, சிக்கன் டிக்கா, பனீர் டிக்கா போன்றவற்றை ஹோட்டலில் மட்டும்தான் வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். தற்போது மலிவான விலையில் கிடைக்கும் காலிஃப்ளவரைக் கொண்டு இந்தச் சுவையான காலிஃப்ளவர் டிக்காவை, வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
**என்ன தேவை?**
காலிஃப்ளவர் – 300 கிராம்
பொட்டுக்கடலை மாவு – ஒரு கப்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
**எப்படிச் செய்வது?**
காலிஃப்ளவரைச் சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும். பின்பு இதனுடன் பொட்டுக்கடலை மாவு, இஞ்சி – பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய், தயிர், எலுமிச்சைச்சாறு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். மாவு பதம்போல் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். பின்னர், மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போல லேசாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
**உங்கள் கவனத்துக்கு**
பச்சை நிறக் கீரைகள் மற்றும் `க்ரூசிஃபெரஸ் காய்கறிகள்’ (Cruciferous Vegetables) என்று அழைக்கப்படும் முட்டைகோஸ், காலிஃப்ளவர், புரொக்கோலி ஆகியவற்றில் பீட்டா கரோட்டின் என்ற தாவர வேதிப்பொருள் அடங்கியுள்ளது. இது இயற்கையாகவே சருமத்தைப் பாதுகாக்கும். மேலும், இந்த உணவுகளில் காணப்படும் லூட்டின் மற்றும் ஸீயஸான்தின் (Luetin, Zeaxanthin) போன்ற தாவர வேதிப்பொருள்கள், எண்ணெய்ப்பசை, சருமத்தில் உண்டாகும் சுருக்கம், சூரிய ஒளியினால் சருமம் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
[நேற்றைய ரெசிப்பி: காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை](https://www.minnambalam.com/k/2019/09/11/1)
�,