சிலைகள் திருட்டு தொடர்பான 50 வழக்குகளின் ஆவணங்களை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் காவல் துறையினர் ஒப்படைக்கவில்லை என ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, 2017ஆம் ஆண்டு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், பல மாதங்களாகத் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம், சிலைக் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, “சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய ஆவணங்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று (நவம்பர் 1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரி மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருவதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்குக் காத்திருக்காமல் இந்த மனு மீது விரைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கிடையே, பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சிலைக் கடத்தல் தொடர்பான 50 வழக்குகளுக்கான முதல் தகவல் அறிக்கைகளைக் காவல் துறை இன்னும் தங்களுக்குத் தரவில்லை என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, 50 முதல் தகவல் அறிக்கைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தர வேண்டும் என்று காவல் துறைக்கு அறிவுறுத்தினர் நீதிபதிகள். வழக்கு விசாரணையை, வரும் நவம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.�,”