கர்நாடகாவில் இடைத் தேர்தல் நடக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ராம்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் சந்திரசேகர் போட்டியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில முதல்வர் குமாரசாமி ராமநகர் மற்றும் சன்னபட்னா ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் தனது ராமநகர் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ஜம்காந்தி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சித்து நியமகௌடா, கடந்த மே 28ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த இரண்டு தொகுதிகளுக்கும், சிவமொக்கா, மாண்டியா, பெல்லாரி உள்ளிட்ட 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 3ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. குமாரசாமி வெற்றிபெற்ற ராம்நகர் தொகுதியில் அவரது மனைவி அனிதா குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவின் சார்பில் எல். சந்திரசேகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடையவுள்ளது.
தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களே மீதம் உள்ள நிலையில், திடீர் திருப்பமாக ராம்நகர் பாஜக வேட்பாளர் சந்திரசேகர், தான் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து மீண்டும் காங்கிரஸிலேயே இணைந்துள்ளார். இது பாஜகவுக்கு பலத்த பின்னடைவாக மாறியுள்ளது. இதன் மூலம் ராம்நகர் தொகுதியில் போட்டியிடும் அனிதா குமாரசாமியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.சி லிங்கப்பாவின் மகனான சந்திரசேகர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது காங்கிரஸில் மீண்டும் இணைந்திருப்பது பாஜகவுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர் கூறுகையில், “பாஜக தலைவர்கள் யாரும் எனக்காக பிரச்சாரம் செய்யவில்லை. இடைத் தேர்தல் என்னும் போரில் நான் ஒரு பலி ஆடு என்பதை உணர்ந்தேன்” என்று பாஜக தலைவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.�,