இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் கும்கி-2 தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்த படம் கும்கி. இருவருக்குமே இதுதான் முதல் படம். ஆனால் கும்கிக்கு முன்னதாக சுந்தரபாண்டியன் வெளியாகிவிட்டதால் அதன் வாயிலாக திரையில் அறிமுகமாகிவிட்டார் லக்ஷ்மி மேனன். கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றது என்றாலும் மோசமான படம் எனும் கேட்டகரிக்குள் இது செல்லவில்லை எனலாம்.
கும்கியில் இடம்பெற்ற பாடல்கள், டி.இமானின் திரை பயணத்தையே புரட்டிப் போட்டது. அந்த அளவுக்கு ஹெட் போன்கள் தேயத் தேய இதன் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தனர் ரசிகர்கள். 2012இல் வந்த கும்கியின் அடுத்த பாகத்தை எடுக்கத் தயாரான பிரபு சாலமன் லிங்குசாமியின் உறவினரும் இன்னும் வெளிவராத ‘ரா ரா ராஜசேகர்’ எனும் பட நாயகனுமான மதியை கதாநாயகனாகத் தேர்வு செய்தார். இவருக்கு கதாநாயகியாக டாக்டர் ராஜசேகர் மற்றும் நடிகை ஜீவிதாவின் மகளான ஷிவானி நடிக்கவிருப்பதாக முதலில் கூறப்பட்டுவந்தது.
ஆனால் தற்போது நடிகை அதிதி மேனனே இதில் கதாநாயகியாக வலம்வரவுள்ளார். இவர்களுடன் ராட்சசன் படத்தில் மிரட்டல் போலீஸாக வலம்வந்த சூஸன் நடிக்கிறார். மேலும், ஆர்ஜே பாலாஜி, திருச்செல்வம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இதற்கு இசையமைக்கிறார்.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்புகள் தொடங்கி தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்துவந்தன. இந்நிலையில் இதன் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக இப்பட இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
தான் கடைசியாக இயக்கியிருந்த தொடரி படமும் தயாரித்திருந்த ரூபாய் படமும் பெரிய அளவிலான வெற்றியைக் குவிக்கவில்லை. எனவே இந்தப் படத்தை வெற்றிப்படமாக ஆக்க பிரபு சாலமன் படத்தில் மெனக்கெட்டிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.�,”