அசுரன் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் திரைப்படம் கரிசல் எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இது அவர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முதல் படம் ஆகும்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இந்தப் படத்தில் நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியானது. தற்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியான நிலையில் அவர் காவல்துறை அதிகாரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் பசுபதி இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பசுபதி ஏற்கெனவே தனுஷ் நடித்த சுள்ளான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் .
இப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கோவில்பட்டியில் நேற்று (பிப்ரவரி 15) தொடங்கியது. கரிசல் வட்டாரப் பின்னணியில் திரைக்கதை அமைந்துள்ளதால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்குப் படமாக்கப்படவுள்ளன.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர் கருணாஸின் மகன் கென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.
�,”