�
2040ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் உள்கட்டுமானத் துறையை மேம்படுத்த 4.5 லட்சம் கோடி டாலர் தேவைப்படும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
தொழில் ஆலோசனை நிறுவனமான *டன் & பிராட் ஸ்ட்ரீட்* சார்பாக அக்டோபர் 31ஆம் தேதி டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரியான அமிதாப் காந்த் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “தற்போது செயல்பாட்டில் இருக்கும் கட்டுமானத் திட்டங்கள் மிக மந்தமாகச் செயல்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் செயல்படும் இதுபோன்ற திட்டங்களை மறு கட்டமைப்பு செய்து அவற்றை சிறப்பாகச் செயல்படவைக்க வேண்டிய தேவை உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சமுதாயத்தின் நலனுக்கும் உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும்.
2040ஆம் ஆண்டுக்குள் உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்த இந்தியாவுக்கு 4.5 லட்சம் கோடி டாலர் வரையில் தேவைப்படலாம். இத்துறையில் அரசு அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் உள்கட்டுமானத் திட்டங்களுக்காக செலவிட்ட தொகை குறித்த விவரங்களைப் பார்த்தோமேயானால், ரயில்வே, விமான நிலையம், சாலை வசதி போன்ற திட்டங்களில் அரசுதான் அதிகளவில் செலவிட்டுள்ளது. ஆனால் உள்கட்டுமானத் திட்டங்கள் செயல்படுவதும் அதற்கான மேலாண்மையும் மிக மந்தமாகவே இருக்கிறது. எனவே நம் நாடு இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் போக்குவரத்துச் செலவுகள் மிக அதிகமாக உள்ளன என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்” என்று தெரிவித்தார்.�,