�
நாடு முழுவதும், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான மழை பெய்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பெய்து வரும் பெருமழை காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்; 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்து பெருமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், சுமார் 461 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
ஷாஜகான்பூரில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோல சீதாப்பூர், அமேதி, அவுராயா, ரேபரேலி, உன்னாவ் ஆகிய மாவட்டங்களில், இந்தப் பெருமழையினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மழையில் சிக்கி 18 விலங்குகளும் இறந்துள்ளன.
உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழையால் 40 அடி உயரமுள்ள கெம்ப்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால், அங்கு தற்காலிகமாகச் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மழையினால், உ.பி. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பெருமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
�,”