�
எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துவரும் நிலையில், சீனாவிலிருந்து இந்தியாவுக்குள் ஆட்டோமொபைல் பாகங்கள் இறக்குமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன உதிரிப் பாகங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் அளவை விட பத்து மடங்கு கூடுதலான பொருட்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுகின்றன. 2018ஆம் நிதியாண்டில் மொத்தம் 4.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இது 2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட 27 சதவிகிதம் கூடுதலாகும். வரும் ஆண்டுகளிலும் சீனப் பொருட்கள் இறக்குமதி அதிகரிக்கும் என்று ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சுற்றுச் சூழல் மாசுபாட்டுக் காரணியைக் கருத்தில் கொண்டு எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டுக்கு மாறும்படி மக்களை அரசு வலியுறுத்தி வருகிறது. அதற்காக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்கிறது. எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் சர்வதேச அளவில் சீனா முன்னிலை வகிக்கிறது. சர்வதேசச் சந்தையில் இப்பிரிவில் 60 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ள சீனா, சிறப்பான பேட்டரி தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. இதனால் அந்நாட்டிடமிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி அதிகரிக்கும். எலெக்ட்ரிக் வாகனப் பாகங்களுக்கான உற்பத்தி ஆலைகள் இந்தியாவில் இல்லை என்பதால், சீனாவின் இறக்குமதியையே இந்தியா சார்ந்திருக்கிறது.�,