�ஆமிர் கானின் 54ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1994ஆம் ஆண்டு வெளியான பாரஸ்ட் கம்ப் என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி இந்தப் படம் உருவாக உள்ளது. டாம் ஹேங்க்ஸ் நடித்த அந்தப் படம் ஆறு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று உலகம் முழுவதும் பிரபலமானது. 90களில் அந்தப் படத்தைத் தழுவி பாலிவுட் இயக்குநர் குண்டன் ஷா, ஷாருக் கானை கதாநாயகனாகக் கொண்டு இயக்குவதாக இருந்தார். ஆனால், அப்போது உருவாகாமல் போனது.
தற்போது இந்தப் படத்தை சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சௌஹான் இயக்கவுள்ளார். வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு லால் சிங் சத்தா எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் அக்டோபர் மாதம் படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்துக்காக ஆமிர் கான் 20 கிலோ வரை உடல் எடையை குறைக்கவுள்ளார். 2020ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரஸ்ட் கம்ப் படத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்த 1950 – 1990 காலகட்ட அரசியல், சமூக மாற்றங்கள், முக்கிய நிகழ்ச்சிகள் காட்சிகளோடு பின்னப்பட்டிருக்கும். அந்நாட்டு அதிபர் ரொனால்ட் ரீகன், ஜான் எஃப் கென்னடி உட்படப் பலரது வாழ்க்கை நிகழ்ச்சிகளும், சர்ச்சைகளும், அவர்களைப் பற்றிய விமர்சனப் பார்வையும் முன்வைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், கடந்த நாற்பதாண்டுக் கால இந்திய வரலாறு லால் சிங் சத்தா திரைப்படத்தில் கூறப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.�,