விரைவில் வெளியீட்டுக்குத் தயாராகிவரும் ஒன் ப்ளஸ் 6T ஸ்மார்ட்போனில் பயனர்கள் விரும்பத்தகாத அம்சம் ஒன்றை அந்நிறுவனம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
தனது தனித்துவமான அம்சங்களைக் கொண்டு சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஒன் ப்ளஸ் இந்தியாவில் தனது விற்பனையை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் இதன் முந்தைய மாடல்களான ஒன் ப்ளஸ் 5 மற்றும் ஒன் ப்ளஸ் 6 இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வரிசையில் தற்போது ஒன் ப்ளஸ் 6T என்னும் புதிய மொபைல் இந்த ஆண்டு வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. இந்த மொபைல் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் என ட்விட்டரில் செய்திகள் பரவி வந்தாலும் அந்நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த போனின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து ரகசியம் காத்து வரும் அந்நிறுவனம் தற்போது அதில் ஹெட்போனுக்கான ஜாக் இருக்காது என்ற தகவலை மட்டும் ட்விட்டரில் கசியச் செய்துள்ளது.
ஹெட்போன் ஜாக் இல்லாத ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் 7 சீரிஸில் முதன்முதலாக அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஹூவே, கூகுள் பிக்ஸல் ஆகிய நிறுவனங்கள் இந்த முறையைப் பின்பற்றியது. தற்போது ஒன் ப்ளஸ் நிறுவனமும் ஆப்பிளின் ஹெட்போன் ஜாக் இல்லாத தொழில்நுட்பத்தை பின்பற்றவுள்ளது. அதற்கு பதிலாக ஒன் ப்ளஸ் 6Tயில் Type C port வழங்கப்படவுள்ளது. Type C port ஹெட் போன் என்பது சார்ஜர் பின்னில் செருகும் ஹெட் போனாகும்.
ஹெட்போன் ஜாக் இல்லாமல் வடிவமைக்கப்படுவதால் இந்த போனின் பேட்டரித் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தொழில்நுட்பம் தண்ணீர் மற்றும் தூசுகளை எதிர்க்கும் IP68 ரேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. *(போனை 2 மீட்டர் தண்ணீர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வைத்திருந்தாலும் அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதைக் குறிப்பதே IP68 ரேட்டிங் ஆகும்.)*
ஒன் ப்ளஸ் 3T, 5T க்கு அடுத்தபடியாக T வெர்சனில் மூன்றாவதாக வெளிவரவிருக்கும் இந்த ஒன் ப்ளஸ் 6Tயின் ஹெட் போன் ஜாக் இல்லா தொழில்நுட்பத்துக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து ட்விட்டரில் அந்நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் ஹெட் போன் ஜாக்கையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் இதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் பேட்டரித் திறனை மட்டும் கருத்தில் கொண்டு ஒன் ப்ளஸ் நிறுவனம் ஹெட்போன் ஜாக்கை தியாகம் செய்ய முடிவு செய்துள்ளது.
உயர்ரக போன்களில் ஒன்றாகக் கருதப்படும் சாம்சங் Galaxy Note 9 போனில் ஆடியோ ஜாக்கின் அமைப்பைக் கெடுக்காமலேயே அதிக பேட்டரி திறன் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை அதிருப்திப்படுத்தும் ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் இந்த முடிவில் மாற்றம் நிகழுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
�,”