நீண்டகாலம் பழகிய நண்பரை வாழ்க்கை துணையாக்கிக்கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற கருத்து பரவலாக உண்டு. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தின் டீசர், இக்கருத்துக்கு நேர்மாறான கோட்பாட்டை முன்வைத்து மென்மையான நகைச்சுவையோடு உருவாகியுள்ளது.
அசோக் செல்வன், ரித்விகா சிங், வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ மை கடவுளே’. இந்தப் படத்தின் டீசர் நேற்று (அக்டோபர் 17) மாலை வெளியாகியுள்ளது.
சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருக்கும் அசோக் செல்வனும் ரித்விகா சிங்கும் மணவாழ்க்கையின் மூலம் தம்பதியாகின்றனர். தோழி ரித்விகாவை மனைவியாகப் பார்க்க முடியாமல் அசோக் செல்வன் திணற அதன்பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து 1.21 நிமிட டீசராக வெளியிட்டிருக்கிறது ஓ மை கடவுளே படக்குழு.
நகைச்சுவை கலந்த காதல் படமாக வந்திருக்கும் இந்தப் பட டீசர், ரசிக்கும்படி அமைந்துள்ளது. ஆச்சரியமாக இந்தப் பட டீசரின் இறுதியில் விஜய் சேதுபதி வருகிறார். இந்தப் படத்தில் கடவுளாக முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் எனத் தகவல்கள் ஆரம்பத்திலிருந்தே வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது அது உறுதியாகியிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ராட்சசன் படத்தைத் தயாரித்த ஆக்ஸஸ் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் வழங்க அசோக் செல்வன், ஜி.தில்லி பாபு தயாரித்துள்ளார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு, லியோன் ஜேம்ஸ் இசை.
தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால், விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
�,”