மீட்புப் பணிகளுக்கு ரூ.11 கோடி செலவானதா? ஆட்சியர் விளக்கம்!

Published On:

| By Balaji

குழந்தை சுஜித் மீட்புப் பணிகளுக்கு செலவான தொகை குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி தம்பதியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் கடந்த 25ஆம் தேதி மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதையடுத்து, சுஜித்தை மீட்கும் பணிகள் 4 நாட்களாக நடைபெற்றன. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை வேகப்படுத்தினர்.

மேலும் சுஜித் மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே ரிக், போர்வெல் இயந்திரங்கள் கொண்டு குழிதோண்டி சுஜித்தை மீட்கும் பணிகளும் நடந்தன. எனினும் 80 மணி நேரம் மீட்புப் பணிகள் தோல்வியில் முடிந்து, கடந்த 29ஆம் தேதி அதிகாலை சுஜித் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

இந்நிலையில் குழந்தை சுஜித்தின் உடலை மீட்க தமிழக அரசு 11 கோடி ரூபாய் செலவு செய்தது என சமூகவலை தளத்தில் ஒரு செய்தி வேகமாக பரவியது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அது வெறும் வதந்தி என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி ஆட்சியர் சிவராசு வெளியிட்ட அறிவிப்பில், “ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ரூ.5 லட்சம், 5,000 லிட்டர் டீசல் மட்டும் தான் செலவானது. சுஜித் மீட்புப் பணிக்காக ரூ.11 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை. எல்&டி, ஓஎன்ஜிசி மற்றும் என்எல்சி ஆகிய நிறுவனங்கள் தங்களது செலவுத் தொகையை கோரவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். மீட்புப்பணிக்காக செலவிட்ட தொகை குறித்து பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share