திண்டுக்கல்லில் துப்பாக்கிச் சூடு நடத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் ராகேஷ்குமார் (26). இவர் மரியநாதபுரம் அருகே உள்ள செட்டிக்குளம் என்ற குளத்தை மீன் வளர்ப்பதற்காக குத்தகைக்கு எடுத்துள்ளார். குத்தகைக்கு எடுத்த அந்த குளத்தில் ராகேஷ்குமார் தினமும் இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார். அதுபோன்று நேற்றிரவு(ஜனவரி 2)இவர் குளத்தின் அருகே தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தங்களிடமிருந்த நாட்டு துப்பாக்கியின் மூலம் சரமாரியாக ராகேஷை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் ராகேஷ் உடம்பை துளைத்ததால், அந்த இடத்திலேயே அவர் சரிந்து விழுந்தார்.
உடனடியாக ராகேஷை அங்கிருந்த நண்பர்கள் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் கொலை நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டது.
இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில், மீன் வளர்ப்புக்காக செட்டிகுளத்தை குத்தகை எடுப்பது தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
போலீசாரின் விசாரணையில் குளத்தை குத்தகை ஏலத்தில் எதிர்முனையாக இருந்த மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மரிய ஆரோக்கியதாஸ் மகன் பிரகாஷ் (36), சந்தியாகு மகன் மரியபிரபு (37), பெருமாள் மகன் ஜான்சூர்யா (27), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி (28) உள்ளிட்டோரை போலீசார் இன்று கைது செய்தனர்.
இதையடுத்து ராகேஷை கொலை செய்யப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, இரண்டு அரிவாள் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஐஜி அன்பு கூறுகையில், திண்டுக்கல்லில் கொலை நடந்த 12 மணி நேரத்திற்குள் போலீசார் விரைந்து குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். மேலும், இதில் தொடர்புடைய நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். குற்றங்களைத் தடுக்க பல்வேறு பிரிவுகளில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
சமீப காலமாக தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது கவலை அளிக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் மாமல்லபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காமேஷ் என்பவர் அவருடன் பயணம் செய்த ரவுடி ஒருவரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு பழனியில் நிலத்தகராறு தொடர்பாக திரையரங்க உரிமையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர். அதற்கு ஒரு வாரம் முன்பு சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். நேற்றிரவு திண்டுக்கல்லில் இந்த சம்பவம் நடந்த நிலையில், இன்று காலை சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளைபோன சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,