விவசாயத்திற்காக இலவச மின்சாரம் ரத்துசெய்யப்படாது என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பியுள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் விதமாக அமைந்துள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டுமென பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், திட்டக்குடி பகுதியில் விவசாயப் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் புதிய மின் மீட்டர் இணைப்பில் மீட்டர்கள் பொருத்தப்பட்டது அப்பகுதி விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின் மீட்டர் பொருத்தியது விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே என்றும் அவர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால், இந்தத் தகவலை மின்சார வாரியம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக மின் வாரியம் இன்று (மே 24) கூறுகையில், “இலவச விவசாய மின் இணைப்பு தரும்போது மீட்டர் பொருத்துவது கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடைமுறையில் இருந்து வருகிறது. விவசாயப் பயன்பாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்பதை அளவிட மட்டுமே மின்மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளது.
சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இலவச மின்சாரம் என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்பதால் அது ரத்துசெய்யப்படாது” என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**எழில்**�,