கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை: 6 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறையினர்!

Published On:

| By Balaji

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் கரடி, காட்டு மாடு, சிறுத்தை போன்ற வன விலங்குகள் திறந்தநிலை கிணறுகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் அடிக்கடி தவறி விழுவதும் அவற்றை வனத்துறையினர் போராடி மீட்பதும் தொடர்கதையாக இருக்கிறது. இந்த நிலையில் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை ஒன்றை 6 மணி நேரம் போராடி ஊஞ்சல் கட்டி மீட்டுள்ளனர் வனத்துறையினர்!

கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் திறந்த நிலையில் உள்ள ஒரு கிணற்றில் நேற்று முன்தினம் காலை உறுமல் சத்தம் கேட்டிருக்கிறது. ஊர் மக்கள் எட்டிப்பார்த்தபோது, சிறுத்தை ஒன்று தவறி கிணற்றில் விழுந்து மேலே வர முடியாமல் போராடி வருவதைக் கண்டனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மீட்பு குழுவினருடன் விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக ஊஞ்சல் ஒன்றை கிணற்றுக்குள் இறக்கினர். தண்ணீரில் தத்தளித்த அந்த சிறுத்தை ஊஞ்சல் மீது ஏரி அமர்ந்தது. மயக்க ஊசி செலுத்தாமல் வலையைப் பயன்படுத்தி சிறுத்தையை மீட்க முடிவு செய்து, கிணற்றின் சுற்றுவட்டத்தை வலையைக் கொண்டு மூடினர். கிணற்றின் வெளிப்புறத்தில் கூண்டை திறந்து வைத்து தயார் நிலையில் இருந்தனர். ஊஞ்சல் மீது அமர்ந்திருந்த சிறுத்தையை ஊஞ்சலோடு மெதுவாக மேலே இழுத்தனர். சிறுத்தை மேலே வந்ததும் லாகவமாக கூண்டுக்குள் அடைத்து பூட்டினர். கூண்டோடு வாகனத்தில் ஏற்றி வனப்பகுதியில் விடுவிக்க கொண்டு சென்றனர்.

வனத்துறை பணியாளர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி சிறுத்தையை உயிருடன் மீட்கப்பட்டது குறித்து நீலகிரி கோட்டத்தின் மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம், “சுமார் 40 அடி ஆழ கிணறு மூடப்படாமல் இருந்ததால் சிறுத்தை தவறி விழுந்துள்ளது. ஆறு மணி நேரம் போராடி சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிறுத்தைக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளித்து அப்பர் பவானி வனப்பகுதியில் விடுவிக்க இருக்கிறோம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது குடியிருப்புகளில் திறந்தவெளிக் கிணறுகளை மூடி பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

**-ராஜ்**

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share