அரசு நிகழ்ச்சி மற்றும் தனியார் நிறுவன நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலைகளின் பல்வேறு கலை வடிவங்களை மதிப்புணர்ந்து அவற்றை முன்னெடுத்து செல்லவும், நாட்டுபுறக் கலைஞர்களின் சமூக பாதுகாப்பிற்காகவும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும், தமிழ்நாடு அரசு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்தின்படி 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு நாட்டுபுறக் கலைஞர்கள் நலவாரியம் தோற்றுவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள நாட்டுப்புறக் கலைகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்கவும், நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வினை செம்மைப்படுத்தவும், நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கிலும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் வளர்ச்சி நிறுவனங்கள், தகவல் தொழில் நிறுவனங்கள் நடத்தும் நிறுவன மற்றும் பண்பாட்டு விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்திட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தொழில்துறையும், தொழில்நுட்பத் துறையும் உரிய ஆணைகளை வெளியிட வேண்டும்.
அதுபோன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிக் கூடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும், முக்கிய தினங்களிலும் நாட்டுபுறக் கலை நிகழ்ச்சிகளை நடத்திட பள்ளிக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், மருத்துவக் கல்வி இயக்ககம், சட்டக் கல்வி இயக்ககம், அனைத்து பல்கலைக் கழகங்களின் பதிவாளர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதுகுறித்து உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,