அரசுப் பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்குகிறது என்று வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படுவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சூழலுக்கு ஏற்றவாறு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 24), ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாகத் தகவல் வெளியானது. ’10ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதியிலிருந்தும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியிலிருந்தும் தொடங்கும்’ என்றும் இதுதொடர்பாக சில பள்ளிகளில் உள்ள நோட்டீஸ் பலகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
தற்போது, இந்த செய்தி தவறானது என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில், ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என வெளியான தகவல் முற்றிலும் தவறானது. தற்போது மாணவர் சேர்க்கை பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாணவர் சேர்க்கை என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிடும் எனவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,