நாங்குநேரி: புதிய தமிழகம் நிர்வாகிகளின் புதிய பாதை!

Published On:

| By Balaji

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார்.

நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் வாக்குகள் முப்பதாயிரத்துகும் மேல் உள்ளது. ஆனாலும் இடைத்தேர்தல் பணிகள் தொடங்கியதிலிருந்தே மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த புதிய தமிழகத்தை அதிமுக தலைவர்கள் ஓரங்கட்டுவதாக ஒரு தோற்றம் இருந்தது.

இதற்குக் காரணம் பற்றி விசாரித்து நாங்குநேரியில் அதிமுகவின் சாதிச் சடுகுடு என்ற தலைப்பில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

அதாவது, “விக்கிரவாண்டி தொகுதியில் புதிய தமிழகத்தின் ஆதரவு என்பது அதிமுகவுக்கு ஒரு பொருட்டு அல்ல. ஏனெனில் அங்கே புதிய தமிழகத்துக்கு அடிப்படை இல்லை. ஆனால், தென் மாவட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டு பத்து சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய வாக்கு வங்கியாக தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகள் இருக்கின்றன. ஆனாலும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியை சந்திக்கவோ, பரப்புரைக்கு அழைக்கவோ இன்னமும் அதிமுக தயாராக இல்லை. இதனால் டாக்டர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.

இதற்கான காரணம் என்பதை அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது அது டாக்டருக்கு மேலும் நெருடலாகிவிட்டது. அதாவது நாங்குநேரியில் தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகளுக்கு இணையாக தேவர் இன வாக்குகளும் உள்ளன. அமமுக இந்த முறை தேர்தல் களத்தில் இல்லை. எனவே டாக்டர் கிருஷ்ணசாமியை அதிமுக சார்பாக பிரச்சாரத்துக்கு அழைத்து வந்தால், தேவர் இன வாக்குகள் முழுமையாக தமக்கு விழுமா என்று அதிமுக சந்தேகப்படுகிறது. இதனால்தான் டாக்டர் கிருஷ்ணசாமியை இன்னும் அதிமுக தலைவர்கள் சந்திக்கவில்லை என்கிறார்கள். ஆக தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகளை லோக்கல் அட்ஜெஸ்மென்ட் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக டாக்டர் வந்தால் முக்குலத்து வாக்குகளை திமுக காங்கிரஸ் கைப்பற்றிவிடுமோ என்பதற்காகவே இந்த சாதிச் சடுகுடு நடத்தப்படுகிறது” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்தத் தகவலை அறிந்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று வெளிப்படையாக முடிவெடுத்துவிட்டார். இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள புதிய தமிழகம் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

“நாங்கள் அதிமுகவை ரொம்ப நம்பி ஏமாந்துவிட்டோம். 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2010 ஆம் ஆண்டு மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று கருதி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவுக்கு மாறிக் கொண்டிருந்த நேரம். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து புதிய தமிழகத்தின் 15 க்கு மேற்பட்ட கோரிக்கைகளவை வலியுறுத்தினோம். அதில் தேவேந்திர குல வேளாளர் என்று எங்களை அடையாளப்படுத்துமாறு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது அவர். ‘நான் அப்படித்தானே அழைக்கிறேன். மாற்றி அழைப்பதில்லையே?’ என்று என்னிடம் கேட்டார். அப்போது நான், ‘மேடம், நீங்கள் அழைப்பதில் எங்களுக்கு சந்தோஷம். ஆனால் அது அரசாணையாக வேண்டும். எங்களை வேறு பெயர்களில் அழைப்பதை மக்கள் அவமானமாகக் கருதுகிறார்கள். அவர்கள் இந்த மண்ணின் தொன்றுதொட்ட மூத்த குடிமக்கள். இது எங்களது 100 ஆண்டு கோரிக்கை” என்று நான் சொன்னதும், ‘அப்படியென்றால் நான் ஆட்சிக்கு வந்ததும் செய்கிறேன்’ என்று சொன்னார். ஆனால் மறந்துவிட்டார்.

2012 சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நான் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இல்லை. உடனே இரண்டு மூத்த அமைச்சர்களை அனுப்பி, ’இந்த சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்தவுடன் உங்களுக்கு நிறைவேற்றித் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனாலும் நிறைவேறவில்லை. இப்போது வரை அதிமுக அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அதனால் எங்கள் கட்சி அதிமுகவை ஆதரிக்காது” என்று அறிவித்தார் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் தலைவரின் முடிவையடுத்து அக்கட்சியின் தென் மாவட்ட குறிப்பாக நெல்லை மாவட்ட நாங்குநேரி நிர்வாகிகளை தொடர்புகொண்டு வரும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள், ‘ஒரு முக்கியமான இடைத்தேர்தலை ஏன் மௌனமாகக் கடக்கிறீர்கள்? காங்கிரஸுக்கும் தேவேந்திர குல மக்களுக்குமான உறவு பாரம்பரியமானது. எனவே நீங்கள் இம்முறை கிராம லெவலில் காங்கிரஸுக்கு அமைதியாக பணியாற்றுங்கள். உங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறோம்” என்று சொல்லி புதிய தமிழகம் நிர்வாகிகளை புதிய பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share