�கலைக்கு மதமில்லை: மதராஸ் மாகாணத்தின் முதல் கிறிஸ்துவ பரதக் கலைஞர் – அகிலாமணி ஸ்ரீனிவாசன்

Published On:

| By Balaji

h4>நிவேதா லூயிஸ்

“அம்மாவைப் பற்றி விவரமாக எழுதும் அளவுக்கு என்னிடம் தரவுகள் இல்லையே? எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன். அம்மாவுடன் வாழ்ந்த ஒன்றிருவர் தான் இன்னும் இருக்கிறார்கள். இயன்ற தகவல்களை உங்களுக்குத் தருகிறேன்” என்று பேசத் தொடங்கினார் மருத்துவர் கீதா மணி.

“ஓ…அகிலாமணி, நடனம் எல்லாம் ஆடுவாங்களே… அவங்க மகளா?” என்ற சிறு வயது விசாரிப்புகள் மட்டுமே தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் கீதாவின் நினைவில் இருக்கின்றன. அகிலாவை நெருங்கிய உறவுகள் நல்ல தாயாய், சிறந்த அத்தையாய், உறவாய் நினைவில் வைத்திருக்கின்றன. ஆனால் பாலசரசுவதி, ருக்மிணி தேவி போன்ற மாபெரும் நடனக் கலைஞர்களின் சமகாலத்தில் புகழ்பெற்றிருந்த அகிலாமணி தேவியை சமூகம் துடைத்துப் போட்டாற்போல மறந்திருக்கிறது.

1927 மே 4 அன்று சாமுவேல் முத்துசாமி ஸ்ரீனிவாசன்- ஞானதீபம் சதானந்த அம்மாள் தம்பதியின் கடைசி மகளாக அகிலாமணி தேவி சேலத்தில் பிறந்தார். சாமுவேல் ஞானதீபம் தம்பதிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அவர்களில் ஒருவர் இறந்து போக, மற்ற நால்வரும் பாசத்துடன் வளர்க்கப்பட்டார்கள். முதல் மகள் தயாமணியும் கடைக்குட்டி அகிலாமணியும் 21 ஆண்டுகள் இடைவெளியில் பிறந்தார்கள்.

வனத்துறை அதிகாரியான அகிலாவின் தந்தை ஸ்ரீனிவாசனுக்கு அடிக்கடி இடமாற்றம் வரும் என்பதால் குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்தது. “தாத்தா ஸ்ரீனிவாசனை இன்றும் நெல்லை, பாளையங்கோட்டை பகுதி மக்கள் நினைவு வைத்திருக்கிறார்கள். அவருக்கு அங்கு வீடு ஒன்று உண்டு. ‘ரேஞ்சர் ஸ்ரீனிவாசன்’ என்று இன்றளவும் அவரைச் சொல்பவர்களுண்டு” என்கிறார் அகிலாவின் மகள் கீதா.

அகிலாவின் தாய் சதானந்தம், கிறிஸ்துவ இசை மும்மூர்த்திகளில் ஒருவராக அறியப்படும் வேதநாயகம் சாஸ்திரியாரின் கொள்ளுப் பேத்தியாவார். வேதநாயகம் சாஸ்திரியாரின் முதல் மகனான சிகாமணி சாஸ்திரியாரின் மகன் ஜெபமணி சாஸ்திரியார். ஜெபமணியின் மகள் சதானந்தம். பாரம்பரியமிக்க கிறிஸ்துவக் குடும்பம் என்பதால் கிறிஸ்துவ பக்தி, வாழ்வியல் நெறிகளில் குடும்பம் சிறந்து விளங்கியது.

இசைக் குடும்ப வாரிசு என்பதால் இயற்கையிலேயே இசை, நடனத்தில் அகிலாவுக்கு ஆர்வம் இருந்தது. “தாத்தாவுக்கு கலைத்துறை மேல் பெரும் ஆவல் இருந்தது. என் அப்பாவும், அகிலாவின் அண்ணனுமான தம்பிதுரைக்கு எம். எஸ்.சுப்புலட்சுமியின் தாய் மதுரை சண்முகவடிவு மூலம் கர்னாடக இசை கற்றுத்தர தாத்தா ஏற்பாடு செய்தார்” என்று சொல்கிறார் ஜெர்மனியில் வசிக்கும் தம்பிதுரையின் மகளான டாக்டர் காஞ்சனா. “தம்பிதுரைக்கு மட்டுமல்ல, தயாமணி, என் அம்மா என தன் மூன்று குழந்தைகளுக்கும் சண்முகவடிவு மூலமே கர்னாடக இசையை தாத்தா கற்றுத்தரச் செய்தார்” என்று கீதா சொல்கிறார்.

மகள் அகிலாவின் நடன ஆர்வத்தைக் கண்டுகொண்ட ஸ்ரீனிவாசன், நட்டுவனார் ஒருவரை வரவழைத்து மகளுக்கு வீட்டிலேயே நடனப் பயிற்சி தரத் தொடங்கினார். “அம்மா எந்த வயதிலிருந்து நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார் என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் 1941ஆம் ஆண்டு, தன் 14ஆவது வயதிலேயே அவர் மேடை நிகழ்ச்சிகளில் ஆடிவந்தார் என்ற தகவலை செய்தித் தாள்கள் சொல்கின்றன” என்கிறார் கீதா.

**கிறிஸ்துவர் பாடிய வாதாபி கணபதிம்**

அலாரிப்பு, தில்லானா என்று வழக்கமாக பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளில் ஆடப்படும் உருப்படிகளைத்தான் தொடக்கத்தில் அகிலாமணி ஆடிவந்தார். “அத்தையின் ஃபேவரிட் பாடல்கள் என்றால் ‘வேலவரே உம்மைத் தேடி ஒரு மடந்தை’ பாடல், ‘நடனமாடினார் வெகு நாகரீகமாகவே’ ஆகிய பாடல்களைச் சொல்லலாம். என் அப்பாவுக்கு ‘வாதாபி கணபதிம்’ தான் பாடப்பிடிக்கும். ஆனால், அந்தக் காலத்தில் இதற்கு கிறிஸ்துவ சமூகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்து மதப் பாடல்களுக்கு ஆடுவதா, பாடுவதா என்று காட்டமான விமர்சனங்கள் வந்தன. ஆனால் தாத்தா எதையும் கண்டுகொள்ளவில்லை. அவற்றை இந்து மதப் பாடல்களாக அவர் கருதவும் இல்லை. நம் பண்பாடு சார்ந்த பாடல்கள் அவை என்ற தெளிவு அவருக்கு அப்போதே இருந்தது. பெரும் முன்னோடியாகவே அவர் வாழ்ந்தார்” என்று காஞ்சனா சொல்கிறார். இதை ஆமோதிக்கும் கீதா, இந்த எதிர்ப்பு ஸ்ரீனிவாசன் பிறந்த நெல்லைப் பகுதியில்தான் அதிகம் இருந்தது என்கிறார். பரதநாட்டியத்தைத் தமிழரின் பண்பாடு என்றே தாத்தா தொடர்ந்து எடுத்துச் சொன்னார் என்றும் கீதா விளக்குகிறார். “அந்தக் காலத்தில் அத்தைக்கு பரதநாட்டிய ஆடைகளுக்கு ஏற்றாற்போல முழு நகை செட்டும் தங்கத்தில் தாத்தா செய்து கொடுத்திருந்தார் என்றால் அவரது ஆர்வத்தை நினைத்துப் பாருங்கள்” என்று காஞ்சனா வியக்கிறார்.

**அரங்கேற்றம்**

சேலத்தில் வெகு விமரிசையாக மகளின் நடன அரங்கேற்றத்தை ஸ்ரீனிவாசன் நடத்திக் காட்டினார். கிறிஸ்துவ சமூகத்தின் எதிர்ப்பை சமாளிக்க எண்ணிய குடும்பம், அகிலாவை கிறிஸ்துவ கீர்த்தனைகள் மற்றும் பாடல்களுக்கு ஆடுமாறு வழிகாட்டியது. அண்ணன் தம்பிதுரையும், தயாமணியும் இணைந்து தங்கை அகிலா ஆடுவதற்குப் பின்னாளில் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். தங்கை ஆடும் கச்சேரிகளுக்கு அண்ணன் தம்பிதுரை பாடல்கள் பாடுவதுண்டு. என்ன காரணத்தாலோ அவரும் இசைத்துறையில் அதிக நாட்கள் நீடிக்காமல் ராணுவப் பணியில் சேர்ந்துவிட்டார்.

“அம்மா தனக்கு மிகவும் பிடித்த பாடலாக கிறிஸ்துவின் பாடுகளைச் சொல்லும் ‘நெஞ்சே நீ கலங்காதே’ பாடலைச் சொல்வார். இந்துப் பாடல்களுக்கு ஆடுகிறார் என்று எதிர்ப்பு கிளம்பிய பிறகு அம்மா வேதநாயகம் சாஸ்திரியாரின் கீர்த்தனைப் பாடல்களுக்கு அதிகம் ஆடத்தொடங்கினார். சாஸ்திரியாரின் குடும்பத்தில் நடனமாடத் தொடங்கிய முதல் பெண் என் அம்மாதான். அம்மாவைப் பார்த்து ஆர்வம்கொண்ட என் உறவினரான அஞ்சனா ரிச்சர்ட்ஸ் பின்னாளில் கிறிஸ்துவ நடனப்பள்ளி ஒன்றை நிறுவினார் என்று கீதா சொல்கிறார்.

தயாமணி அம்மாளும் தன் தங்கைக்கென கிறிஸ்துவப் பாடல்கள் இயற்றினார். “ ‘தாயே மரியே உந்தன் ஏழை குலத்துதித்த தேவகுமாரன் ஏசு கொண்ட கோலத்தை பாரம்மா’ என்ற பாடலை தயாமணி இயற்ற, தம்பிதுரை பாட, அம்மா சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஆடியிருக்கிறார். அதே போல வேதநாயகம் சாஸ்திரியார் இயற்றிய பெத்லகேம் குறவஞ்சிக்கும் அம்மா ஆடியிருக்கிறார். அவரது நடனம், உயரம், அழகு காரணமாக அவரை பலரும் ருக்மிணி தேவி,அருண்டேலுடன், பாலசரசுவதியுடன் ஒப்பிட்டு பேசுவார்கள் என்று அம்மா சொன்னதுண்டு. அதே போல சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் அம்மாவைத் தேடி வந்தன” என்றும் கீதா சொல்கிறார்.

**சேவைக்கான நடனம்**

“அம்மா நிறைய தொண்டு நிகழ்ச்சிகளில் நடனமாடி இருக்கிறார். 1940களின் செய்தித்தாள்களில் அவரது நிகழ்ச்சிகள் பற்றிய பாராட்டுகளும், நிகழ்ச்சிக் குறிப்புகளும் உள்ளன” என்று கீதா சொல்கிறார். மதுரையில் டாக்டர் பார்க்கர் வாகன் நிறுவிய ‘பேர்ட்ஸ் நெஸ்ட்’ ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதி திரட்ட மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலில் அகிலாவின் நடன நிகழ்ச்சி நடைபெற்றதை 13.1.1943 தேதியிட்ட தந்தி செய்தித்தாள் சொல்கிறது. இதே செய்தியை 20.1.1943 தேதியிட்ட ஆங்கில ‘மெட்ராஸ் மெயில்’ செய்தித்தாளும் தெரிவிக்கிறது.

சேலம் செஞ்சிலுவை சங்கத்துக்காக நடனமாடிய அகிலா, தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். திருச்செங்கோடு தாலுகா போர் முயற்சிகள் குழு போர் வீரர்களுக்கு உற்சாகமளிக்க ஏற்பாடு செய்த நடன நிகழ்ச்சியில் ஆடி, அகிலா தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார். அகிலாவின் தங்கப் பதக்கங்களை அவரது மகள்கள் பின்னாள்களில் சங்கிலிகளில் கோத்து அணிந்துகொள்வதுண்டு என்று உறவினர் காஞ்சனா சொல்கிறார். அதை பெருமையுடன் ஆமோதிக்கிறார் கீதா. வேலூர் செஞ்சிலுவை சங்கம் அளித்த ஏப்ரல் 1944 தேதியிட்ட தங்கப்பதக்கம், திருவண்ணாமலை செஞ்சிலுவை சங்கம் அகிலாவுக்கு அளித்த மே 1944 தேதியிட்ட தந்த தங்கப்பதக்கம் ஆகியவற்றின் படங்களை அனுப்பியிருக்கிறார்.

**அகிலமாணியின் நடன ஆவணங்கள்**

“ஆடுகிற பிள்ளைக்குப் படிப்பு வராது என்ற பழமொழியைப் பொய்யாக்கி, ஆட்டத்திலும், பள்ளியிலே தான் வாசிக்கும் பத்தாவது படிப்பிலும் நல்ல தேர்ச்சி பெற்றுள்ள அகிலா சென்ற வாரம் சென்னையில் ஒரு கோடியில் நடனமாடினார். இவரை சென்னைவாசிகள் பார்ப்பது இதுவே முதல் தடவை. இதேபோல இவர் பட்டணம் பார்ப்பதும் இதுவே முதல் தடவையாம். கவலைப்படாதேயம்மா… இனி அடிக்கடி பட்டணம் பார்க்கலாம்” என்று ஒரு செய்தித்தாள் அகிலாவின் முதல் சென்னை நாட்டிய நிகழ்ச்சியைப் பதிவு செய்கிறது. 1942ஆம் ஆண்டு மே 6 அன்று சேலத்தில் இந்திய இளைஞர் லீக் அமைப்பின் சேலம் நன்கொடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அகிலாமணி ஸ்ரீனிவாசன் நடனமாடினார் என்றும் செய்திக் குறிப்பு உள்ளது.

21.10.1942 தேதியிட்ட நாரதர் இதழில் ஒரு விமர்சகர், கண்ணனின் லீலைகளை ஆடும்போது ஒரு கட்டத்தில் அகிலா “அப்படியே கண்ணீர் சொரிந்துவிட்டார்… எல்லாவற்றையும் விட எல்லோருக்கும் ஆச்சரியம் அளித்தது ஒரு (கிறிஸ்துவ) குடும்பப் பெண் இவ்வளவு சிரத்தையோடு பரதநாட்டியக் கலையைக் கற்று, இவ்வளவு அழகாக அதனை ஆட அறிந்து கொண்டதுதான். வெகு சீக்கிரமாகவே இவரது பெயர் எங்கும் முழங்கப் போகிறதென இன்று நான் ஜோஸ்யம் சொல்கிறேன். குறித்து வைத்துக்கொள்ளுங்கள்” என்று எழுதியுள்ளார். அன்றைய சமூக சூழலில் குடும்பப் பெண்கள் ஆடுவது எத்தனை கடினம், அதிலும் கிறிஸ்துவப் பெண்கள் மேடையேறி ஆடுவதில் எவ்வளவு தடைகள் இருந்திருக்கும் என்று இந்தப் பத்தி நமக்குப் புரியவைக்கிறது.

சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அகிலா நடனமாடியதை நாரதர் இதழ் குறிப்பிட்டுள்ளது. “சென்னைக்கு அருகிலுள்ள தாம்பரத்தில் இருக்கும் கிருஸ்துவக் கல்லூரியிலிருக்கும் அற்புதமான ஆண்டர்சன் ஹாலிலிருந்து வெளியே வந்தேன். அன்று அங்கே, கிருஸ்துவ காலேஜ் கிராம சேவா சங்க உதவி நிதிக்காக கதம்பக் கச்சேரி ஒன்று நடத்தினார்கள். கடைசியாக குமாரி அகிலாவின் பரதநாட்டிய அபிநயக் கச்சேரி எல்லாம் ப்ரோகிராமில் இருந்தன” என்கிறது அந்த செய்தி.

01.09.1943 தேதியிட்ட நாரதர் இதழில் ரசிக ரஞ்சன சபாவில் நடைபெற்ற பிரபல டைரக்டர் கே. சுப்ரமணியத்தின் ‘நடன கலா சேவா’ குழுவினரது நிகழ்ச்சி விமர்சனம் இடம்பெற்றுள்ளது. விமர்சனம் எழுதியவர், “முன்பு ஒரு தடவை கூட இந்த கோஷ்டியின் நடனத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இத்தடவை அவர்களது புரோகிராமிலும், நடனத்திலும் ஒரு ‘பாலிஷ்’ இருப்பதைக் கண்டேன். இம்முறை அவர்களது கோஷ்டியிலே ஸ்ரீமதி அகிலாமணி என்ற பெண்மணியும் சேர்ந்து அற்புதமாக பரத நாட்டியமாடினார். பல மாதங்களுக்கு முன் கிறிஸ்துவக் கல்லூரியிலே இவர் நடனமாடியதைக் குறித்து நான் எழுதிய பின்னர் சென்னையில் உள்ள சபாக்காரர்கள் இவரைப் பற்றி விசாரித்துக்கொண்டு இருந்தார்கள். இன்று அவர்கள் இவரைத் தாமே சேர்த்து, ‘ரொம்ப ஜோரா ஆடறா பார் இந்தப் பொண்ணு’ என்று வாய்விட்டுக் கூறினார்கள்” என்று எழுதியுள்ளார்.

“பரதநாட்டியம் ஆட வரும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால், அகிலா மாதிரி இருக்க வேண்டும் என்று தான் சொல்லுவேன் நான். அவருக்கு அன்று நாலைந்து சான்ஸுகள் கொடுத்திருந்தார் டைரக்டர் சுப்ரமணியம். பெரிய குடும்பத்தில் பிறந்த இப்பெண்மணி இப்போது எஃப்.ஏ. ஃபார்ம் வாசித்துக்கொண்டு இருக்கிறார். கூடிய சீக்கிரம் இவரை தனியாக சென்னை நகர மேடைகள் ஒன்றில் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தையான கே.சுப்ரமணியத்தின் குழுவில் அகிலா ஆடினார் என்பது தெளிவாகிறது.

“கடைசியாகத்தான் வந்தது அகிலாவின் நடனம். அகிலா மேடை மீது வந்ததுமே சபையில் ஒருவித நிசப்தம். இதுவும் நல்ல சகுனம்தான். குமாரி ருக்மணியிடம் குறை கண்டவர்கள், ‘ஆஹா! இப்படின்னா இருக்கணும் நாட்டியம் ஆடுகிறவா’ என்றே கூறியிருப்பார்கள். கலாட்டா செய்வதே தமது பிறப்புரிமை என்று நினைத்திருக்கும் மாணவர் கும்பலிலே நல்ல பெயர் எடுப்பது எளிதல்ல. சற்றும் சபை கூச்சமில்லாது அகிலா கண்டோர் பிரமிக்க, பரதநாட்டியமாடி, சில பாட்டுகளுக்கு வெகு அழகாக அபிநயம் பிடித்தார்” என்றும் விமர்சனம் சொல்கிறது.

25.09.1943 தேதியிட்ட செட்டிநாடு இதழ், காரைக்குடி ஸ்ரீ ஷண்முகவிலாஸில் 29.09.1943 அன்று இரவு 10 மணிக்கு ‘தமிழ்நாட்டில் பிரபல மேடைகளில் தங்க மெடல்கள் பரிசு பெற்று செட்டிமார் நாட்டிற்கே முதன்முதல் விஜயம் செய்யும் இசைவாணி, நடன கலாராணி மிஸ்.அகிலமணிதேவி, FA அவர்களின் அற்புத நடனத்தைக் கண்டு ஆனந்திக்க இடத்துக்கு முந்துங்கள்’ என்று விளம்பரம் செய்துள்ளது.

12.12.1943 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு மயிலை ரசிக சஞ்சன சபாவில் அகிலாமணி தேவியின் நடன நிகழ்ச்சி ஃப்ளூட் மகாலிங்கம், பாப்பா மற்றும் வைத்தியனாத ஐயர் ஆகியோரின் துணையுடன் நடைபெறும் என்று தெரிவிக்கிறது. அன்றைய இசையுலகின் ஜாம்பவான்களும் திருவிதாங்கூர் சமஸ்தான வித்வான்களுமான வயலின் கலைஞர் பாப்பா வெங்கடராமையா, மிருதங்கக் கலைஞர் தஞ்சை வைத்தியனாத ஐயர், மாலி என்று செல்லமாக அழைக்கப்பட்ட புல்லாங்குழல் கலைஞர் டி.ஆர். மகாலிங்கம் ஆகியோருடன் நடன நிகழ்ச்சிகளை 16 வயது சுட்டிப் பெண் அகிலாமணி தேவி நடத்தியுள்ளார். 22.12.1943ஆம் தேதியிட்ட நாரதர் இதழ், அவரது மேற்கண்ட நடன நிகழ்ச்சியை வானளாவ புகழ்கிறது.

“மான் போல துள்ளி விளையாடுகிறார். மனம் வரவில்லை யாருக்கும் எழுந்து போக” என்று விமர்சனம் நீள்கிறது.

நாரதர் இதழ், “இந்திய கிறிஸ்துவ வகுப்பினரிலே முதன்முதலாக பரதநாட்டியக் கலையில் ஈடுபட்டவர் என்று சொல்லப்படுகிறது” என்றே அகிலாவைக் குறிப்பிடுகிறது. கிறிஸ்துவ பாடல்களுக்கு ஆடத் தொடங்கியபின் சபாக்களில் அதிகம் அகிலாவின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. “அம்மா பெரும்பாலும் நிதி திரட்டும் நிகழ்ச்சிகளுக்கு உதவ மேடைகளில் ஆடிவந்தார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் செஞ்சிலுவை சங்கம், போர் முயற்சிகள் குழு போன்ற அமைப்புகளுக்காகவே ஆடி வந்தார். சேலத்தில் அப்போது பிரபலமாக இருந்த பார்சி பெண்மணியான மிஸஸ் மாஸ்டர்ஸ் என்பவர் அம்மாவைப் பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கியிருக்கிறார். அவரது கணவர் வனத்துறையில் உயரதிகாரி என்று நினைக்கிறேன்” என்று கீதா சொல்கிறார்.

திருமணத்துக்குப் பின் அகிலா நடனத்தைத் தொடர்ந்தாரா? அவருக்கு நடனம் சொல்லிக் கொடுத்த குரு யார்? இந்தத் தேடல்களில் மேலும் பல சுவாரஸ்ய உண்மைகள் கிடைத்தன. **அவை அடுத்த பாகத்தில்**

**கட்டுரையாளர் குறிப்பு**

நிவேதிதா லூயிஸ்

சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த “முதல் பெண்கள்” என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொலிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

தகவல்கள் நன்றி:

கீதா மணி, இங்கிலாந்து

காஞ்சனா லான்செட், ஜெர்மனி

டாலி சாமுவேல், சென்னை

ஸ்வர்ணமால்யா, சென்னை

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share