ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம்!

Published On:

| By admin

ஏற்காட்டில் நடந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடக்க விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பேசும்போது, ‘படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் மற்றும் சிறு உணவகங்கள் அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார். இந்த நிலையில், ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் மற்றும் அங்கு சிறு உணவகங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசியபோது, “சுற்றுலா வளர்ச்சி திட்டங்களைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் சுற்றுலா வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்து சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். அதன்படி ஏற்காடு படகு இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்காடு படகு இல்லமானது சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய இடமாக இருக்கிறது. இந்த படகு இல்லத்தை மேம்படுத்துவது குறித்தும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு உணவு வகைகளை விற்பனை செய்வதற்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சிறு உணவகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் விதமாக மிதக்கும் உணவகத்தை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்காட்டில் உள்ள புளியூர் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த சாகச சுற்றுலாத்தளத்தில் டெண்ட் அமைத்தல், சாகச விளையாட்டுகள் உள்ளிட்டவை இடம்பெறும். விரைவில் சுற்றுலாத்துறை சார்பில் சாகச சுற்றுலாவுக்கும், மிதக்கும் உணவகத்துக்கும் என்று புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளது” என்று சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment