கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தார்: விஜயபாஸ்கர்

Published On:

| By Balaji

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் குணமடைந்தார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் 4,000க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் இந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62ஆக உள்ளது. குறிப்பாகக் கேரளாவில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள தமிழக எல்லையில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

இந்தச் சூழலில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணம் அடைந்துள்ளார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநிலத்துக்கு ஒரு நல்ல செய்தி. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் முழுமையாகக் குணமடைந்தார். அவரது ரத்த மாதிரிகள் கொரோனா இல்லை என்பதைத் தெரிவித்துள்ளது. அவர் இவ்வளவு வேகமாகக் குணமடைந்ததற்குக் காரணம் மிகச்சிறந்த சிகிச்சையும் தேவைகளைக் கையாண்ட நிபுணர்களின் நிபுணத்துவமும்தான். தற்போது தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பிய 1,31,793 பேர் இதுவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 1,138 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறிகள் இருந்த 72 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 69 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது” என்று தெரிவித்தார்.

மேலும், “அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அவசியமில்லை” என்று கூறிய அமைச்சர், “தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்” என்றும் கூறினார்.

அதுபோன்று அமெரிக்காவிலிருந்து கொரோனா அறிகுறியுடன் சென்னை வந்த 15 வயது சிறுவன் சிகிச்சைக்குப்பின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் பொறியாளரும் குணம் அடைந்துள்ளார் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

**-கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share