கல்கி பகவான் ஆசிரமத்துக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.500 கோடி வருமானம் கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
ஆன்மிக குரு என்றழைக்கப்படும் கல்கி பகவானுக்குத் தொடர்புடைய ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை ஆகிய இடங்களில் கடந்த புதன்கிழமை முதல் வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் ஆந்திராவின் வரதாபாளையம் என மொத்தம் 40 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. கல்கியின் மகன் கிருஷ்ணனுக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
காணிக்கை என்ற பெயரில் ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களிடம் அதிகளவு கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
வருமானவரித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.43.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.26 கோடி மதிப்பிலான 88 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. ரூ.5 கோடி மதிப்பிலான 1,271 காரட் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பணம், தங்க வைர நகைகள் மற்றும் அமெரிக்க டாலர் என ரூ.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கி பகவான் குழுமம், இந்தியாவில் மட்டுமல்லாது சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களில் பெரிய அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளன என்றும் வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டு வரும் நிலையில், நான்காவது நாளாக நேற்றும் வருமானவரித் துறை சோதனை தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,