மீன்பிடி தடைக்காலம் 15ஆம் தேதி தொடங்குவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 14ஆம் தேதி முடிய 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதைத் தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தடை ஆணையின்படி இந்த ஆண்டும் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மேற்காணும் தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கும் கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம். கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான அந்த 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பாட்டு மீன்வளம் பெருக வாய்ப்புள்ளது. அதனால் மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி மேற்குறிப்பிட்டுள்ள 61 நாட்கள் முடியும் வரை மாவட்ட மீனவர்கள், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க வேண்டாம் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையொட்டி, அனைத்து விசைப்படகுகளும் வரும் நாளை (ஏப்ரல் 14) இரவுக்குள் கரை திரும்பிவிட வேண்டும் என்றும் அதன்பின் செல்ல தடை என்றும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
**-ராஜ்-**
.