~மீன்பிடி தடை: உயர் ரக மீன்கள் விலை உயர வாய்ப்பு!

Published On:

| By admin

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15ஆம் தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப் படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்காரணமாக கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த மீன்பிடி தடை காலங்களில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மிக கவலைக்குரியது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share