இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கையை தொடங்கியுள்ள இலங்கை அரசிற்கு எதிராக தமிழக மீனவர்கள்,அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகையில், தமிழக மீனவர்களை கைது செய்வதை இலங்கை அரசு கைவிடவில்லை.
இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம்(பிப்ரவரி 7) மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெற்று ராமேஸ்வர மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இவர்களில் மூன்று படகுகளில் சென்ற 11 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, அவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.
இலங்கை அரசின் தொடர் அத்துமீறல் நடவடிக்கையால் கோபமடைந்த ராமேஸ்வர மீனவர்கள் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினர். அதில் தற்போது கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுதலை செய்தல், அதற்கு முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும், பிப்ரவரி 11ஆம் தேதி ரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ராமேஸ்வர மீனவர்கள் தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800க்கும் மேல் விசைப்படகுகளை இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலை இழந்துள்ளனர்.
முன்னதாக, 7ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் சேர்த்து, இலங்கை காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மீனவர்களையும், அவர்களின் 79 மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**