தமிழ்நாட்டில் முதன் முறையாக கடலூர் மாவட்டம் குமராச்சியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி,இந்தாண்டு தொடக்கத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து தற்போது (915+50) 965-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தாண்டிலேயே, பெட்ரோல் விலை பல்வேறு இடங்களில் செஞ்சுரி அடித்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிவிப்பில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் முதன் முறையாக டீசல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது. கடலூர் மாவட்டம் குமராச்சி பகுதியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.29க்கும், காட்டுமன்னார் கோவில் பகுதியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100க்கும் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களிலும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியுள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 10 காசுகளுக்கும், டீசல் விலை 37 காசுகள் அதிகரித்து 97 ரூபாய் 93 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்துள்ளனர். அதோடு, தற்போது மழை காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கான வாடகை விலை உயர்ந்து, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகளின் விலைவாசி அதிகரிக்கும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
**-வினிதா**
�,