சிறப்புக் கட்டுரை: என்று தொடங்கியது இந்த “கோ பேக்” முழக்கம்?

Published On:

| By Balaji

ராஜன் குறை

சமீப காலங்களில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் ட்விட்டர் என்ற சமூக ஊடகத்தில் “கோ பேக் மோடி” என்ற வாசகம் மிக அதிகம் பேரால் பகிரப்பட்டு டிரெண்ட் என்று அழைக்கப்படும் முக்கிய தகவல் பரிவர்த்தனையாக உலக அளவில் கவனிக்கப்படுகிறது. இந்த டிரெண்டிங்கை ஏற்படுத்த திராவிட இயக்க அன்பர்கள், அனுதாபிகள் பலரும் ட்விட்டரில் களமிறங்கி இந்தத் தகவலைத் தொடர்ந்து பகிர்ந்து செயல்படுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் இது தவறாமல் நிகழ்வதைக் கவனிக்கும் பாரதிய ஜனதா மற்றும் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களும் இதில் பாகிஸ்தானியரின் கைவரிசையும் கலந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். ஏனெனில் இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் நரேந்திர மோடிக்கு இப்படிப்பட்ட எதிர்ப்பு இருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் குற்றச்சாட்டை விரிவாக ஆராய்ந்த ஆல்ட் நியூஸ் என்ற வலைதள ஏடு, இவ்வாறு பாகிஸ்தானிலிருந்து ட்வீட் செய்து அதை இந்தியாவின் டிரெண்டாக மாற்ற முடியாது என்று கூறுகிறது. ஏனெனில் ட்வீட் செய்பவர் தன்னுடைய வசிப்பிடத்தைப் பொய்யாகப் பதிவு செய்தாலும், அந்தத் தொலைபேசியின் புவிசார் இருப்பிடத்தை வைத்தே எங்கிருந்து ட்வீட் ஆகிறது என்பதை ட்விட்டர் மென்பொருள் முடிவு செய்யும். “கோ பேக் சாடிஸ்ட் மோடி” என்ற ட்வீட் தமிழர்களால்தான் பெருமளவு டிரெண்ட் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அந்த வலைதளக் கட்டுரை கூறுகிறது. தமிழகத்தில் உள்ளோருக்கு இதில் பெரிதாக வியப்பதற்கு எதுவுமில்லை.

ராஜ்தீப்சர் தேசாய் போன்ற ஊடகவியலாளர்கள், பிற வடநாட்டு குடிமக்களும்கூட என்னதான் இருந்தாலும் ஒரு பாரதப் பிரதமராக, விருந்தினராக வரும் வெளிநாட்டு அதிபரைச் சந்திக்க வருபவரை கோ பேக் என்று சொல்வது மலினமான அரசியல் என்றுதான் கூறுகிறார்கள். சிலர் மோடி திரும்பிப் போய்விட்டால் சீன அதிபர் யாரை சந்திப்பார் என்று புத்திசாலித்தனமாகக் கேட்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் மத்திய அரசின் செயல்பாடுகள் அவ்வளவு தீவிரமான எதிர்ப்புணர்வை தமிழகத்தில் உருவாக்கியுள்ளன என்பதுதான். இந்த உண்மையைப் புரிந்துகொள்ள வடஇந்திய ஊடகங்கள் தயாராக இல்லை. அப்படி என்ன அதிருப்தி என்று தோன்றலாம். தினசரி பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர்கள் தமிழ் தொலைக்காட்சிகளில் பேசுவதை பார்த்தாலே இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துவிடும். இருப்பினும் சில முக்கியமான அம்சங்களைக் கூற வேண்டும்.

**ஏன் ஒலிக்கத் தொடங்கியது “கோ பேக் மோடி” முழக்கம்?**

முதலில் வடநாட்டார் புரிந்துகொள்ள வேண்டியது தமிழக அரசியலின் அடிப்படையே நீறுபூத்த நெருப்பாக விளங்கும் வடஇந்திய ஆதிக்கத்துக்கு எதிரான எதிர்ப்புணர்வுதான் என்பதை. இது பார்ப்பனீய இந்து அடையாள எதிர்ப்பாக இருக்கலாம், இந்தி மொழி எதிர்ப்பாக இருக்கலாம், மைய அரசின் மாநில நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளாக இருக்கலாம். இவையனைத்தும் சேர்ந்ததே திராவிட அரசியல்.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கவர்னர் மூலமாக அஇஅதிமுக ஆட்சியை தன் கைப்பிடிக்குள் அடிமை ஆட்சியாகக் கொண்டுவர பாரதிய ஜனதா கட்சி செய்த வேலைகள் மக்களின் வடஇந்திய எதிர்ப்புணர்வைத் தட்டியெழுப்பின. முதலில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கியபோதுகூட மக்களில் ஒரு பகுதியினருக்கு இருந்த சசிகலா எதிர்ப்புணர்வால் அது பாரதிய ஜனதா சூழ்ச்சியாக மட்டும் பார்க்கப்படவில்லை.

ஆனால், கூவத்தூர் சம்பவத்துக்குப் பிறகு சசிகலா பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவை உறுதி செய்துகொண்டு முதல்வராக முயன்றபோது திடீரென்று உச்ச நீதிமன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த தீர்ப்பு திடீரென்று வெளியாகி அவர் சிறைக்குச் சென்றது அப்பட்டமான அரசியல் நிகழ்வாகவே தோன்றியது.

அதற்கடுத்து எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அவரையும் பாஜக விலைக்கு வாங்கியதும், கீரியும் பாம்புமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் கவர்னரே கரங்களை இணைத்து கட்டாயக் கூட்டணி ஏற்படுத்தியதும் யார் சூத்ரதாரி என்பதைத் தெளிவாக்கியது.

சசிகலாவின் காலில் விழுந்து முதல்வரான எடப்பாடி பழனிசாமி பதவிக்காக சசிகலாவையும், தினகரனையும் தூக்கி எறிந்ததும், மத்திய அரசின் எடுபிடியாக மாறியதும் திராவிட, தமிழ் உணர்வாளர்களுக்கு மோடியின் மீது கசப்புணர்வை ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

இதையெல்லாம் தெளிவாக நினைவில்கொண்டுதான், சிந்தித்துப் பார்த்துதான் கசப்புணர்வு வரும் என்பதல்ல; வெகுஜன சிந்தனையில் கசப்புணர்வு ஏற்பட்டால் காரணம் மறந்த பின்னும் தங்கிவிடும். ஆனால், மோடி ஆட்சியைப் பொறுத்தவரை நீட் தேர்வு அந்த உணர்வைப் பெரிதும் ஊதிப் பெருக்கிவிட்டது. அனிதாவின் மரணத்தினால் கொந்தளித்துப் போன தமிழ்நாட்டு மக்களை அதற்கு அடுத்த ஆண்டு அந்நிய மாநிலங்களிலும், அண்டை மாநிலங்களிலும் மாணவர்களைத் தேர்வு எழுதவைத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது மத்திய அரசு. அதனால்தான் “கோ பேக் மோடி”, “கோ பேக் சாடிஸ்ட் மோடி”யாக மாறியது. இத்துடன் எட்டு வழிச் சாலை, ஸ்டெர்லைட் ஆலை, நெடுவாசல், விவசாயிகள் கடன் பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகள் கசப்புணர்வை வளர்த்தன. அதனால்தான் நீறுபூத்த நெருப்பு புகையத் தொடங்கியது. இப்போது நாம் நீறுபூத்த நெருப்புக்கான கனல் எப்போது உருவாகியது என்பதையும் காண வேண்டும்.

**திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் போராட்டம்!**

இந்தியா சுதந்திரம் அடைந்த இரு ஆண்டுகளில் செப்டம்பர் 1949 திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகத் தோன்றிய இந்தப் புதிய அரசியல் கட்சி மாநிலங்கள் எங்கும் கிளைகளை அமைத்து, மாவட்ட மாநாடுகளைக் கூட்டி வந்தது. ஆகஸ்ட் 1950இல் அதன் நெல்லை மாவட்ட மாநாடு நடைபெற்றது. அதற்குத் தலைமை தாங்கியவர் கலைஞர் என்ற பின்னாளில் நிலையான அடையாளம் பெற்ற தோழர் கருணாநிதி என்ற இளைஞர். காங்கிரஸ் ஆட்சியின் பல்வேறு அடக்குமுறைகளை வடநாட்டு ஆதிக்கமாக இனம்கண்ட கட்சி, சில போராட்ட முறைகளைப் பின்பற்ற முடிவு செய்தது.

அதில் முதலாவது மத்திய அமைச்சர்கள் யார் தமிழகம் வந்தாலும் அவர்களுக்குக் கறுப்புக்கொடி காட்டுவது என்ற தீர்மானம். பதற்றமடைந்த காங்கிரஸ் அரசாங்கம் தடியடி, சிறைத்தண்டனை என்று பல்வேறு அடக்குமுறைகளைக் கறுப்புக்கொடி போராட்டக்காரர்கள் மீது ஏவிவிட்டது. ஆனாலும் அலையலையாகப் போராட்டம் தொடர்ந்தது.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் முதலில் தமிழகம் வந்தவர் திவாகர் என்ற “ரேடியோ மந்திரி”. இந்தி பிரசார சபாவில் பட்டமளிப்பு விழாவுக்காக வந்தார் அவர். முதன்முதலில் அவருக்குத்தான் வடவர் ஆதிக்க எதிர்ப்பாக தியாகராய நகரிலும், மவுன்ட் ரோட்டிலும், வேறு பல இடங்களிலும் தொண்டர்கள் கூடி கறுப்புக் கொடி காட்டினார்கள். நாள் 1950 செப்டம்பர் 9.

**புகைப்பட உதவி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்**

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சியைக் குறித்த செய்திகள் வெளியான 17.9.1950 தேதியிட்ட திராவிட நாடு இதழில் ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அந்தக்கால அச்சில் உருவங்கள் தெளிவற்று கறுப்பும் வெளுப்புமாக இருக்கும் அந்தப் புகைப்படத்தில் ஒரு பதாகை மட்டும் தெளிவாகப் புலனாகிறது. அதில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள வாசகம் “GO BACK DIWAKAR.”

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share