சேலத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்திருக்கிறது. ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் இன்று பிற்பகல் வரை வரவில்லை.
சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த கணேசன் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி கவிதாவுக்கு வயது 43. இவர் டைலரிங் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் நேற்று(ஜூன் 13) காலை உடல்நிலை சரியில்லை என்று கவிதா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் கவிதா உயிரிழந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர் என்று தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் தகவல் பரவியது. கவிதாவுக்கு ஆஸ்துமா கோளாறு இருந்ததால் அவருக்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக உறவினர்கள் கூறினர். தூய்மைப் பணியாளரின் மனைவி மரணம் அடைந்ததால், அந்த தூய்மைப் பணியாளர், அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வீட்டின் அக்கம் பக்க வீட்டினருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
ஓரிரு நாட்களுக்கு முன் சேலம் வந்து ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘சேலம் மாவட்டத்தில் முன் களப் பணியாளர் யாருக்கும் தொற்று இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இப்போது கவிதாவின் கணவர் கணேசனோடு பணி செய்த தூய்மைப் பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
**-வேந்தன்**�,