தமிழ்நாட்டில் 10 கோயில்களில் முதலுதவி மருத்துவ மையங்களின் ஆரம்ப கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, முதல்வர் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் 10 கோயில்களில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மையங்கள் ரூ.10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து இன்று(அக்டோபர் 20) இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
முக்கியமாக அறம் சார்ந்த பணிகள் பள்ளி, கல்லூரிகள், சமயம் சார்ந்த பள்ளிகள், கருணை இல்லங்கள், அன்னதானக்கூடங்கள், சமய நூலகங்கள், தாங்கும் விடுதிகள், அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகள் தவில், நாதஸ்வர இசை பள்ளிகள் போன்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றது.
பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், திருவரங்கம், மருதமலை, சோளிங்கர், மேல்மலையனூர் ஆகிய 10 கோயில்களில் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ரூ.10 கோடி செலவில் தொடங்க ஆரம்ப கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த மையங்களில் இரண்டு மருத்துவர் மற்றும் செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள் ஒப்பந்த கால அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,