பாகிஸ்தான் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி இடையே தேஸ்காம் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று (அக்டோபர் 31) காலை லியாகத்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயிலின் ஒரு பெட்டியில் தீ பிடித்துள்ளது. காற்றின் வேகத்தால் அந்த தீ மளமளவென அடுத்த பெட்டிகளுக்கும் பரவியுள்ளது.
இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. தீப்பிடித்த பெட்டிகளிலிருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். எனினும் பலர் தீயில் சிக்கிக் கொண்டனர். ”இந்த கோர விபத்தில் பயணிகள் 65 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” என்று ரஹீம் யாரான்கான் மாவட்ட காவல்துறை அதிகாரி அமீர் தைமோர் கான் தெரிவித்துள்ளார். குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் யாரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரயிலில் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ராணுவ ஹெலிகாப்டரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்துக்கு மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரயிலில் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். எகனாமிக் கிளாஸ் வகை பெட்டிகளில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குப் பிரதமர் இம்ரான்கான் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சிகிச்சையை வழங்குமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
— Syed Talat Hussain (@TalatHussain12) October 31, 2019
�,”