சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய அறிவிப்பு: நிர்மலா சீதாராமன்

சர்வதேசப் போக்குவரத்து தொடங்கியதும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், முதல் 5 லட்சம் சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன.

ஊரடங்கினால் பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக கடும் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஜூன் 28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எட்டு நிவாரணத் திட்டங்களை அறிவித்தார். இவற்றில் நான்கு திட்டங்கள் புதியவை என்றும், ஒரு திட்டம் சுகாதாரக் கட்டமைப்புகளுக்கானது என்றும் கூறியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும். மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்த 50,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் வட்டி விகிதமானது, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தை விட 2 சதவிகிதம் குறைவாக இருக்கும், கடன் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இந்தப் புதிய கடன் உத்தரவாதத் திட்டம் அனைத்து பகுதிகளிலும் சிறிய அளவில் கடன் வாங்குவோருக்கும் சென்றடையும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச போக்குவரத்து தொடங்கியதும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், முதல் 5 லட்சம் சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த 5 லட்சம் இலவச சுற்றுலா விசாக்கள் முதலில் வரும் 5 லட்சம் பேர் அல்லது 2022 மார்ச் 31 வரை என்று தெரிகிறது.

இந்த நிலையில் தமிழக அரசும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு மற்றும் அரசு துறை சாரா உறுப்பினர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. சுற்றுலா வளர்ச்சித்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி தலைமையில் இந்தக் குழு செயல்படும். குழுவில் உறுப்பினர்களாக அருங்காட்சியக துறை இயக்குநர், கலை மற்றும் கலாச்சார துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தொல்லியல் துறை ஆணையர் உள்ளிட்ட 16 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**

.�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts