கொரோனா தொற்று மக்களின் உயிரை காவு வாங்கியதை விட, அவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் நசுக்கியதுதான் அதிகம். அதுபோலதான், மார்ச் 2020க்கு பிறகு ரதியின் வாழ்க்கையில் போராட்டம் ஒரு அங்கமாகவே குடி கொண்டுவிட்டது.
28 வயதான வீட்டு வேலை செய்யும் ரதி, தன் கணவன் மற்றும் ராகேஷ்(8), லக்ஷ்யஸ்ரீ(10) ஆகிய இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
கொரோனா தொற்றுக்கு முந்தைய காலத்தில், ஆறு வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு மாதம் ரூ.10,000 வருமானம் கிடைத்துள்ளது. தற்போது, மாதம் 1,500 வரைதான் வருமானம் கிடைக்கிறது என கூறும் ரதி, ஆறு வருடங்களுக்கு முன்பு, சைதாப்பேட்டையில் வசித்து வந்தோம். 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் எங்கள் வீடு மற்றும் உடைமைகள் அடித்து செல்லப்பட்டன. அதையடுத்து, செம்மஞ்சேரிக்கு குடிபெயர்ந்தோம். டிரைவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த என் கணவருக்கு இங்கு வந்த பிறகு எந்த வேலையும் கிடைக்கவில்லை.
ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார். கொரோனா தொற்றினால், அந்த தொழிலும் பாதிக்கப்பட்டது. இதுபோதாது என்று, ஆட்டோவும் ரிப்பேர் ஆகிபோனது. அதை மீண்டும் சரி செய்ய கூடிய அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை. அதனால் அவ்வப்போது வீட்டுக்கு வெள்ளை அடிக்கிற வேலைக்கு சென்று வந்தார்.
கொரோனாவால் ஒரு வருடத்துக்கும் மேலாக எங்கள் இரண்டு பேருக்கும் வேலை இல்லாததால், ரேஷன் கடை மூலமாக அரசு கொடுத்த 1,500-2,500 பணத்தில் தான் சாப்பிட்டு வந்தோம். அதுவும் எங்களுடைய அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல்தான் இருந்தோம். காய்கறிகள் வாங்குவதற்கு கூட எங்களிடம் காசு இருக்காது. பல நேரங்களில் கஞ்சி மட்டும்தான் இருக்கும். அது பிடிக்கவில்லையென்றாலும், வேற வழியில்லை, அதைதான் சாப்பிட வேண்டும் என்கிறார்.
குடும்பத்துக்கு ஒரே வருவாய் ஆதாரமாக இருக்கும் ரதி தாம், வேலை பார்க்கும் இடத்தில் எப்படி நடத்தப்படுகிறேன், என்பதை கூறுகிறார். ”சால் எல்லாம் இங்க வைக்காதே,, அதன்மூலம் எங்களுக்கு அலர்ஜி வந்துவிடும். உன் கழுத்துலே போட்டுக்கோ “என்று அந்த வீட்டின் உரிமையாளர் கூறுவார். தீண்ட தகாதவர்கள் போல் என்னை நடத்துவது பெரிய வலியை கொடுக்கும். இருப்பினும், அந்த வேலையை விட்டு விட்டால், சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று அதை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, வேலையை செய்ய ஆரம்பித்துவிடுவேன். இருப்பினும், அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்களை தினமும் நான் தான் கழுவுகிறேன். அந்த வீடு முழுவதையும் நான் தான் சுத்தப்படுத்துகிறேன். அதன்மூலம் அவர்களுக்கு அலர்ஜி வராதா என்று பலமுறை எனக்குள்ளே நான் கேட்டுக் கொள்வதுண்டு.
அதனால், என் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறுவது ஒன்றுதான். பணம் இருந்தால்தான் நம்மை மற்றவர்கள் மதிப்பார்கள். பணம் இல்லாத காரணத்தினால்தான், இந்தளவுக்கு நாம் கஷ்டப்படுகிறோம். அதனால், கஷ்டப்பட்டு நல்லபடியாக படித்து சீக்கிரம் ஒரு நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறுவேன் என்று குவிண்ட் ஊடகத்திடம்(the quint ) கூறினார்.
”இன்ஜினியர் ஆகி, எங்கம்மாவுக்கு சேலையும், காரும் வாங்கி கொடுப்பேன். நான் வாங்கும் பதக்கங்களை என் அம்மா கையில் கொடுக்க வேண்டும், அவரை காரில் வைத்து ஊரை சுற்றி காட்ட வேண்டும்” என அவர்களது பிள்ளைகளான லக்ஷ்யஸ்ரீம், ராகேஷூம் தெரிவித்துள்ளனர்.
மனதுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் இந்த வார்த்தைகளைக் கேட்ட ரதி, ”என் மொத்த குடும்பத்திற்கும் நான்தான் வருமானம் ஈட்ட வேண்டும். இது எனக்கு சுமையல்ல. வேறு யார் என் குடும்பத்தை பார்க்க முடியும். சிரமங்களையும் சுமைகளையும் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற மனநிலையோடு, இது என்னுடைய கடமை என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் பெண்களுக்கே உள்ள பொறுப்புணர்வோடு.
இந்த ரதி போன்றுதான் பல பெண்கள் தனி ஆளாக நின்று, தங்கள் குடும்பங்களை தாங்கி கொண்டிருக்கின்றனர். இந்த ரதிகள் வாழ்க்கையில் மீண்டும் எழுந்து வெற்றி நடைபோட, இந்த பெண்கள் தினத்தில் “உங்களால் முடியும்” என்ற ஒற்றை வார்த்தை மூலம் உத்வேகத்தையாகிலும் அவர்களுக்கு அளிப்போமே.!
**-வினிதா**
�,”