நீலகிரியில் சுற்றி திரிந்த டி23 புலியை உயிருடன் பிடித்ததற்காக வனத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் டி23 என்ற புலி இதுவரை நான்கு மனிதர்களையும், 40க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்று, அங்குள்ள மனிதர்களை அச்சுறுத்தி வந்தது. மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய இந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வந்தனர். ஆனால், புலி சிக்காமல் காட்டிற்குள் பதுங்கி வந்ததால், ஒருகட்டத்தில் புலியை சுட்டுக் கொல்ல முதன்மை வனத் துறை அதிகாரி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதுபோன்று கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பும் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அந்தப் புலியை கொல்லக்கூடாது, நம் நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான புலிகள் மட்டுமே உள்ளன. புலியை உயிருடன் பிடித்த பின்பு அதன் குணாதிசயங்களை ஆராய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, ட்ரோன் கேமராக்கள், கும்கி யானைகள், மோப்ப நாய்கள், ஆகியவற்றைக் கொண்டு டி23 புலியை உயிருடன் பிடிக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத் துறையினர் ஈடுபட்டிருந்தனர். ஆனால், வனத் துறையினர் கண்ணில் படாமல் கிட்டதட்ட 22 நாட்களாக புலி போக்கு காட்டி வந்தது. ஒருவழியாக கடந்த அக்டோபர் 15ஆம் தேதி டி23 புலியை மயக்க ஊசி செலுத்தி வனத் துறையினர் பிடித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று(அக்டோபர் 21) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, டி23 புலி உயிரோடு பிடிக்கப்பட்டு, மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
புலியை உயிருடன் பிடித்த வனத் துறையினருக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசயங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
**-வினிதா**
�,