இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் நாளை முதல் பகலில் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன. அதில், இரவு நேர ஊரடங்கின்போது தனியார், பொது பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை(ஏப்ரல் 20) முதல் இரவு நேர ஊடரங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் இரவு நேரங்களில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை. மேலும், பகலில் இயங்கக் கூடிய பேருந்துகளில் பயணிகள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், இனிமேல் அரசு விரைவு பேருந்துகள் பகலில் இயக்கப்படும். சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்ற பேருந்துகளானது, அதிகாலை 4 மணி முதல் இரவு 8 வரை இயக்கப்படும். விரைவு பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் பயணம் தேதியை மாற்றி கொள்ளலாம் என்றும் தேதி மாற்றம் செய்யவில்லை என்றால் பேருந்து முன்பதிவு கட்டணம் திருப்பி வழங்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், அன்று விரைவு பேருந்துகள் இயக்கப்படாது. மாநகர போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை, பேருந்துகளில் மக்கள் நின்று கொண்டு பயணிக்கக் கூடாது என்பதால், முக்கிய வழிதடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர ஊடரங்கின்போது அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, நாளை முதல் காலை 4.30 மணி முதல் 9 வரை மட்டுமே நெல்லையிலிருந்து சென்னைக்கு இயக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பேருந்துகள் இரவு 9 மணிக்குள் சென்னை சென்றடையும். தனியார் பேருந்துகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை நெல்லையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் சென்னை சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
�,