மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டையைப் பார்வையிடவும் இன்று (அக்டோபர் 19) முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு முன்னதாக அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள கலை சிற்பங்களைப் பார்வையிட்டனர்.
இருவரின் வருகையைத் தொடர்ந்து மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தற்போது மழைக் காலம் என்றாலும் அதனையும் பொருட்படுத்தாமல் அதிகமானோர் மாமல்லபுரத்துக்குச் சுற்றுலா வருகின்றனர். அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை, கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய இடங்களை ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் வெண்ணை உருண்டையை சுற்றிப் பார்க்கவும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக அந்த பாறையையொட்டி டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 40ம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரூ. 600ம் செலுத்தினால் மட்டுமே பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெண்ணை உருண்டையை இலவசமாக மக்கள் பார்த்து வந்த நிலையில் தற்போது கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
வெண்ணை உருண்டை பாறை பகுதியைக் கூடுதல் கவனத்துடன் பராமரிப்பதற்காகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாறையை தாங்கி பிடித்தவாறு புகைப்படம் எடுக்கப் பலரும் விரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
�,