கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. தமிழகத்தில் ஒருவர் உட்பட இந்தியா முழுவதும் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சென்று வந்த இடங்களை ஆராய்ந்து, வைரஸ் பாதிப்பு பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்று கடந்த வாரம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில். கொரோனா வைரஸ் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கைக்குட்டையை பயன்படுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். குறிப்பாகக் காய்ச்சல் சளி இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் அச்சத்தால் நீண்ட நாள் விடுப்பு தரவேண்டும் என்று மாணவர் ஒருவர் பள்ளி தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதியுள்ளார். முகலிவாக்கத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் எழுதிய கடிதத்தில்,
”நான் தங்கள் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறேன். தற்போது நாட்டில் கொரோனா வரைஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்குச் சளி காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. எனவே மற்ற மாணவர்களின் நலன் கருதி எனக்கு நீண்ட நாள் (medical leave) விடுப்பு தர வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று அரசாங்கமும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகையால் நான் மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாட்களை வருகை நாளாகப் பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார்.
மாணவரின் இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவ, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மாணவனை அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறார். பின்னர் மாணவனைக் கண்டித்து வகுப்பிற்கு அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**கவிபிரியா**
�,