ஒவ்வொரு திங்கள் கிழமையும் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், குறை கேட்கும் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பிரச்சினைகளை மனுவாக எழுதி, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்.
சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலங்களிலும் திங்கள் கிழமை தோறும் நடக்கும் மனு நீதி நாள் முகாமில் கிராமத்து மக்கள், முதியோர்கள்தான் அதிகம் வருகிறார்கள். அதிலும் குறிப்பாக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு நீதி நாள் முகாமில் மனு அளிக்க வருபவர்களில் மலை கிராம மக்களே அதிகம். இவர்கள் காலை பத்து மணிக்கு முன்பே கலெக்டர் அலுவலகம் வந்து , காத்திருந்து மனு அளித்துவிட்டு செல்வதற்கு சில மணி நேரங்கள் ஆகிறது. கூடவே மனு அளிக்க வந்து செல்வதால் இவர்களின் ஒரு நாள் வேலையும் போய், கூலி இழப்பும் ஏற்படுகிறது.
இதை உணர்ந்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவனருள், சமூக ஆர்வலர்கள் மூலம் ஒரு புதிய திட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார். அதாவது திங்கள் கிழமை மனு கொடுக்க வரும் முதியோருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை நேற்று மார்ச் 9 திங்கள் முதல் தொடங்கியிருக்கிறார் கலெக்டர்.
இதன்படி நேற்று மனு கொடுக்க வந்த முதியோர், மாற்றுத் திறனாளிகள் என சுமார் 200 பேருக்கு எவர் கிரீன் டிரஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பின் மூலமாக உணவும், மோரும் விநியோகிக்கப்பட்டது. பிரச்சினை தீர்வதற்காக மனுகொடுக்க வருகிறவர்களுக்கு அன்றைய பிரச்சினையான பசியைத் தீர்த்து வைத்திருக்கிறார் சிவனருள்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அம்பலூர் அசோகனிடம் பேசினோம்.
“வாணியம்பாடியில் இயங்கி வரும் டிரஸ்ட் மூலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவியாக இருக்க வருபவர்கள், ஆதரவற்ற முதியோர்கள் ஆகியோருக்கு உணவு அளித்து வந்தோம். அந்த வகையில் மனு நீதி நாள் முகாமில் அருகே இருக்கும் நெக்னாமலை, வீரணமலை உள்ளிட்ட மலை கிராம மக்களே அதிகம் மனு கொடுக்க வருகிறார்கள். அவர்கள் மனு கொடுத்துவிட்டு மீண்டும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்ப அரைநாள் தாண்டி ஆகிவிடும். இந்த நிலையில் அவர்களுக்கு மதியம் ஒரு வேளை உணவு தரலாம் என யோசித்து திருப்பத்தூர் கலெக்டரிடம் இதை எடுத்துச் சொன்னபோது மனமுவந்து வரவேற்று இத்திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இதற்கான எவர் க்ரீன் டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மனு அளித்த மக்களுக்கு கலெக்டர் உணவு அளித்ததும் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்” என்றார்.
இதனால் உடனடியாக பிரச்சினை தீர்கிறதோ இல்லையோ, பசி தீரும் என்பது ஆறுதலான விஷயம்தான். இதை முன்னெடுத்த தன்னார்வ அமைப்பையும், அதை ஊக்கப்படுத்தி செயல்படுத்திய திருப்பத்தூர் கலெக்டர் சிவனருளையும் மற்ற கலெக்டர்களும் பின்பற்றலாமே!
**-ஆரா**
�,”