பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை வருகை தந்தார். ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, உரையாற்றினார். மேலும் வெளிநாட்டு மாணவர்களுடன் இந்திய மாணவர்கள் கலந்துரையாடும் ஹேக்கத்தான் நிகழ்விலும் கலந்துகொண்டார். அப்போது பிரதமர், “தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. தமிழர்களின் காலை உணவான இட்லி, தோசை, வடை உற்சாகம் தரக்கூடியது. அது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று குறிப்பிட்டு தமிழகம் குறித்து பெருமையாக பேசியிருந்தார். வழக்கமாக பிரதமரின் உரைகள் தூர்தர்ஷனில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
இந்த நிலையில், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் உதவி இயக்குனர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சசி சேகர் வேம்பதி வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை தூர்தர்ஷனின் உதவி இயக்குனர் வசுமதிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, வசுமதி உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில்தான் தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும் எனவும் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முறையான அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் ஐஐடி நிகழ்ச்சி உரையை சரிவர ஒளிபரப்பு செய்யவில்லை என்ற புகாரையடுத்தே வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பொது ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரச்சார் பாரதியின் ஒரு பிரிவுதான் தூர்தர்ஷன். தமிழ் உள்ளிட்ட 21 அலைவரிசைகளில் இயங்கி வரும் தூர்தர்ஷன், பிரதமரின் உரை உள்ளிட்ட அரசின் முக்கிய நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பி வருகிறது.
�,”